சகோதரிகள் இருவரின் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், இருவரும் ஒரே கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் அயன் புதுப்பட்டியைச் சேர்ந்த தம்பதியர் பிச்சை, அகிலாண்டேஸ்வரி. இவர்களுடைய மகள்கள் வித்யா (21), காயத்ரி (20). இவர்கள் இருவரும் திருப்பூர் காங்கேயத்தில் தங்கியிருந்தபடியே அங்குள்ள ஜவுளி நிறுவனம் ஒன்றில் வேலைப் பார்த்து வந்தனர். இந்நிலையில், திருவிழாவில் பங்கேற்பதற்காக இருவரும் சொந்த ஊருக்கு வந்திருந்த நிலையில், அக்கா, தங்கை இருவரும் வீட்டில் சகஜமாக பேசாமல், எப்போதும் செல்போனில் யாருடனோ பேசிக் கொண்டிருந்துள்ளனர். இவர்களின் நடவடிக்கையில் மாற்றத்தைக் கண்ட தாய் அகிலாண்டேஸ்வரி இருவரிடமும் இதுகுறித்து விசாரித்துள்ளார்.
அப்போது, பணிபுரியும் இடத்தில் காங்கேயத்தைச் சேர்ந்த இளைஞர்கள் இருவரை வித்யாவும், காயத்ரியும் காதலித்து வந்தது தெரியவந்தது. இதற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், இனி திருப்பூருக்கு வேலைக்குச் செல்ல வேண்டாம் என கூறி விட்டனர். இதனால், விரக்தி அடைந்த சகோதரிகள் இருவரும் வீட்டை விட்டு வெளியே சென்றனர். சகோதரிகள் இருவரும் காணாமல் போனதால் பெற்றோர் பதறியடித்துக் கொண்டு பல்வேறு இடங்களில் தேடி வந்த நிலையில், வீட்டில் அருகில் உள்ள விவசாயக் கிணற்றின் கரையில் இருவரது செல்போன்களும் இருந்ததை அந்த பகுதியில் மாடு மேய்த்தவர்கள் பார்த்து, கிணற்றுக்குள் எட்டிப் பார்த்துள்ளனர்.
அப்போது கிணற்றில் இருவரது உடல்கள் நீரில் மிதந்தபடி இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு விரைந்த தீயணைப்பு துறையினர், வளநாடு போலீசார் இரண்டு பேரின் உடல்களையும் மீட்டனர். சகோதரிகள் இருவரும், பெற்றோரின் காதல் எதிர்ப்பால் ஒரே கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டது அந்த பகுதியில் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.