தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே ஜி.மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் சுருளி கிருஷ்ணன் (38). இவரது அண்ணன் சுந்தர்ராஜ். இவர்களது உறவினர் மூர்த்தி. நேற்று முன்தினம் இரவு இவர்கள் 3 பேரும் நடந்து வந்து கொண்டிருந்தனர். அதே பகுதியைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி வீட்டின் அருகே அவர்கள் வந்தனர். அப்போது சுந்தரமூர்த்தி, அவரது மனைவி சத்யா (40), தம்பி சரவணகுமார் (48), அவரது மனைவி பாண்டி செல்வி (40) ஆகியோரும் அங்கு வந்தனர்.
அவர்கள், நடந்து சென்ற சுருளி கிருஷ்ணன் உள்பட 3 பேரையும் வழிமறித்து தகராறில் ஈடுபட்டனர். அப்போது சுந்தர்ராஜ், மூர்த்தி ஆகிய 2 பேரும் அங்கிருந்து தப்பி ஓடினர். சுருளி கிருஷ்ணனை மட்டும் அவர்கள் மடக்கி பிடித்தனர். பின்னர் சரவணகுமார், சத்யா, பாண்டி செல்வி ஆகியோர் சுருளி கிருஷ்ணன் தப்பி ஓடாமல் பிடித்து கொண்டனர். அப்போது சுந்தரமூர்த்தி தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சுருளி கிருஷ்ணன் தலையில் சரமாரியாக வெட்டினார். இதில் ரத்த வெள்ளத்தில் அவர் அங்கேயே மயங்கி விழுந்தார்.
இதையடுத்து சுந்தரமூர்த்தி உள்பட 4 பேரும் அங்கிருந்து தப்பி ஓடினர். அக்கம்பக்கத்தினர் சுருளி கிருஷ்ணனை மீட்டு சிகிச்சைக்காக வத்தலக்குண்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சுந்தரமூர்த்தி உள்பட 4 பேரையும் தேடி வந்தனர். இந்நிலையில் அந்த பகுதியில் பதுங்கி இருந்த 4 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தினர்.
அப்போது 4 பேரும் சேர்ந்து சுருளி கிருஷ்ணனை கொன்றதாக வாக்குமூலம் அளித்தனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், கைதான சுந்தரமூர்த்தி மகளும், சுருளிகிருஷ்ணனின் அத்தை மகன் விவேக் மூர்த்தி என்பவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் விவேக் மூர்த்தி சுந்தரமூா்த்தி வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் சுருளி கிருஷ்ணன், சிலருடன் சேர்ந்து விவேக்மூர்த்தி வீட்டிற்கு சென்றார். பின்னர் அவர்கள் அந்த பெண்ணின் வீட்டிற்கு அடிக்கடி செல்ல வேண்டாம் என்று அவருக்கு அறிவுரை கூறினர். இதனை விவேக்மூர்த்தி செல்போன் மூலம் சுந்தரமூர்த்தியிடம் தெரிவித்தார். இதனால் சுந்தரமூர்த்தி ஆத்திரத்தில் இருந்து வந்தார். இந்நிலையில் வீட்டின் வழியாக வந்தபோது வழிமறித்து சுருளி கிருஷ்ணனை அரிவாளால் வெட்டி கொன்றோம் என அவர்கள் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் கூறினர்.