தனது மனைவியுடன் தகாத உறவு வைத்திருந்த சொந்த மாமாவை மருமகன் கட்டையால் அடித்துக் கொன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் துங்கர்பூர் மாவட்டத்தில் உள்ள டவுடா காவல் நிலையப் பகுதியில் கஜூரியாவில் வசிக்கும் 45 வயதான சங்கர், பகோரா கிராமத்திலேயே கூலி வேலை செய்து வந்துள்ளார். அதே பகுதியில் அவரது மருமகன் பிரகாஷ் பகோராவின் (30) வீடு உள்ளது. பிரகாஷ் குஜராத்தில் கூலி வேலை செய்து வருகிறார். பிரகாஷின் மனைவி கிராமத்தில் உள்ள வீட்டில் தனது ஒரு வயது மகனுடன் தங்கியுள்ளார்.
தனது தாய் மாமா சங்கருடன் தனது மனைவி தகாத உறவில் இருப்பதாக பிரகாஷ் சந்தேகம் அடைந்தார். இதனையடுத்து, நேற்று முன்தினம் மாலை 6.30 மணியளவில் பிரகாஷ் தனது கிராமத்திற்கு வந்தார். ஆனால், அவர் தனது வீட்டிற்கு செல்லவில்லை. இரவு 10 மணியளவில் திடீரென வீட்டுக்குச் சென்றார். அப்போது சங்கரும் தனது மனைவியும் தனிமையில் உல்லாசம் அனுபவித்ததை நேரில் பார்த்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த பிரகாஷ், தனது குழந்தை இருந்ததை பொருட்படுத்தாமல் வீட்டில் வைத்திருந்த தடியை எடுத்து அங்கேயே மாமாவை அடிக்க தொடங்கினார். தடியால் தலையில் தாக்கியதில் மாமா சங்கர் பலத்த காயம் அடைந்து அங்கேயே மயங்கி விழுந்தார். இதை பார்த்த பிரகாஷ் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். அவருக்கு சிகிச்சை அளிக்க உறவினர்கள் சங்கரை உதய்பூர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் இறந்தார். இதையடுத்து, சடலத்துடன் குடும்பத்தினர் துங்கர்பூருக்குத் திரும்பினர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த டோவ்டா காவல் நிலைய போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக முழு விசாரணையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். கள்ள உறவு காரணமாக தனது சொந்த மாமாவை அடித்துக் கொலை செய்த மருமகனை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.