கிருஷ்ணகிரி அருகே தொடர் துயர சம்பவங்களால் பாதிக்கப்பட்ட மக்கள் ஊரை காலி செய்து வனப்பகுதியில் குடியேறி வழிபாடு நடத்தினர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் கூளியம் ஊராட்சிக்கு உட்பட்ட ஒம்பலக்கட்டு கிராமத்தில் கடந்த சில ஆண்டுகளாகவே தொடர்ந்து துயர சம்பவங்கள் நடைபெற்று வருவதாகவும், குறிப்பாக சிறுவர்கள், இளம் வயதினர் அடுத்தடுத்து மரணம் அடைந்ததால் அந்த கிராமத்தில் சில ஆண்டுகளாக சுப நிகழ்ச்சிகள், கோவில் திருவிழாக்கள் எதுவும் நடைபெறாமல் இருப்பதாகவும் அப்பகுதி மக்களால் கூறப்படுகிறது. இந்த சம்பவங்களுக்கு தீய சக்திதான் காரணம் என ஊர் பெரியவர்களால் சொல்லப்பட்டுள்ளது.
முன்னோர்கள் காலங்களில் இதுபோன்று துயர சம்பவங்கள் நடைபெற்றால் ஊரை காலி செய்து வனப்பகுதியில் குடியேறி வழிபாடு நடத்தி ஊருக்குள் திரும்புவது வழக்கம். அந்த வகையில், இந்த கிராமத்தைச் சேர்ந்த பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை தங்களது வளர்ப்பு பிராணிகள், ஆடு, மாடு மற்றும் சாமி சிலைகளை எடுத்துக்கொண்டு ஊருக்கு வெளியே உள்ள தோப்பில் குடியேறினர். அங்கு வன தேவதைக்கு படையலிட்டு வழிபாடு நடத்தினர். இதனால் கிராம முழுவதும் ஆட்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
மேலும், திருட்டு மற்றும் கொள்ளை சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க ஊர் எல்லைகளில் காவலுக்கு ஆட்கள் நிறுத்தப்பட்டனர். யாரும் ஊருக்குள் அனுமதிக்கப்படவில்லை மாலை 6 மணிக்கு மேல் தோப்பில் இருந்து கிராம மக்கள் ஊர்வலமாக வீட்டிற்கு சென்றனர். இப்படி செய்வதன் மூலம் கிராமத்திற்கு ஏற்பட்டுள்ள தீய சக்தி குறித்த பயம் நீங்கும் என்றும் அந்த நம்பிக்கையின் அடிப்படையில் முன்னோர்கள் வழிபட்ட முறையில் தற்போது வழிபடுவதாகவும், இதன் மூலம் தங்கள் கிராமத்தில் தீங்கு நீங்கி விட்டதாகவும் கிராம மக்கள் தெரிவித்தனர்.