அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.
கடந்த சில வாரங்களுக்கு முன் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் மற்றும் அவரது உறவினர்கள் வீடுகள் உட்பட 40 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இதில் சில இடங்களில் ஒரு வாரத்திற்கும் மேலாக சோதனைகள் நீடித்த நிலையில், தற்போது சென்னையில் பசுமை வழிச்சாலையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் அரசு இல்லம், கரூரில் உள்ள இல்லத்திலும் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
முந்தைய அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத்துறை பணி நியமனங்களில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரில் தற்போது செந்தில் பாலாஜியின் இல்லங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்த திடீர் சோதனை குறித்து தனக்குத் தகவல் எதுவும் வழங்கப்படவில்லை. சோதனை நடைபெற்று வருகிறது. தற்போது எதுவும் கூற இயலாது. பொறுத்திருந்து பார்ப்போம்” என தெரிவித்துள்ளார்.