மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜி சுயநினைவோடு இல்லை என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் வீட்டில் நேற்று அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் அரசு இல்லத்திலும் சோதனை நடந்தது. அது போல் தலைமைச் செயலகத்தில் உள்ள செந்தில் பாலாஜியின் அறையிலும் சோதனை நடந்தது.
இதைத் தொடர்ந்து சென்னையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் 17 மணிநேரமாக நடந்த சோதனை முடிந்தது. சென்னை பசுமை வழிச் சாலையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டுக்கு அமலாக்கத் துறை அதிகாரிகள் வருகை தந்தனர். இந்த நிலையில் நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்திற்கு அமைச்சர் செந்தில் பாலாஜியை அழைத்துச் சென்றனர்.
அப்போது அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உயர் ரத்த அழுத்தம் மற்றும் நெஞ்சுவலியால் அவர் ஓமந்தூரரார் அரசு மருத்துவமனையில் அழைத்து செல்லப்பட்டார். அவர் தொடர்ந்து அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில்தான் அமைச்சர் செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்டுள்ள ஓமந்தூரார் மருத்துவமனைக்கு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகை தந்தார். தொடர்ந்து மருத்துவத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன், நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு, சேகர் பாபு உள்ளிட்டோர் வருகை தந்தனர்.
இதுகுறித்து அமைச்சர் சேகர்பாபு பேசுகையில், மருத்துவமனையில் அமைச்சர் செந்தில் பாலாஜி சுயநினைவோடு இல்லை. தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரை நான்கைந்து முறை அழைத்தும் கண் விழித்து பார்க்கவில்லை. அவர் கண் திறந்து பதில் சொன்ன பிறகுதான் என்ன நடந்தது என தெரியவரும். அவரது காது அருகே வீக்கம் இருந்தது. அதனால் அவர் நிச்சயம் துன்புறுத்தப்பட்டுள்ளார் என தெரிவித்தார்.