நேற்று முன்தினம் இரவு அமலாக்கத்துறை சோதனைக்கு பிறகு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நள்ளிரவில் கைது செய்யப்படுவதற்கான வாரன்டை அவரிடம் வழங்கினர் ஆனால் அதை அவர் வாங்க மறுத்து விட்டார்.
பின்னர் அவரை கைது செய்து நுங்கம்பாக்கம் அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்து வரும் வழியில் அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு அவரை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்து இருந்தார்கள். இந்த நிலையில் அவருக்கு உடனடியாக ஜாமீன் வழங்க வேண்டும் என்று தெரிவித்து திமுக தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
மேலும் அவருடைய மனைவி மேகலா ஆட்கொணர்வு மனு ஒன்றையும் தாக்கல் செய்தார். இது குறித்து அமலாக்கத்துறை தரப்பில் செந்தில் பாலாஜியை 15 நாட்கள் காவலில் விசாரிக்க அனுமதி வழங்க வேண்டும் என்று தெரிவித்து மனு தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது.
இந்த மனு நேற்று இரவு 7 மணி அளவில் விசாரணைக்கு வரும் என்று தெரிவித்திருந்த நிலையில் பின்னர் விசாரணை ஒத்திவைக்கப்பட்டு இன்று அதன் விசாரணை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.
அதன்படி அமைச்சர் செந்தில் பாலாஜியை 15 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்க கோரி அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனுவை இன்று நீதிமன்றம் விசாரிக்க உள்ளது. சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது.
மேலும் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு, காவிரி மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதி வேண்டி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதும் இன்று முக்கிய முடிவு எடுக்க உள்ளது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம்.