தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திரம் முடிந்தும் பல்வேறு இடங்களில் 100 டிகிரியை தாண்டி வெப்பம் நிலவுகிறது. இந்தாண்டு சென்னையில் 104 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெயில் கொளுத்தியது. கடந்த 15 ஆண்டுகளில் ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான காலகட்டத்தில் சென்னையில் இந்த ஆண்டுதான் அதிகமாக வெயில் சுட்டெரித்துள்ளது. வெயில் வாட்டி வதைத்தாலும் ஒருசில இடங்களில் மழை பெய்து வருகிறது. நேற்று தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படவில்லை. இது மக்களுக்கு ஆறுதலைக் கொடுத்தது.
இதைத்தொடர்ந்து, தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் படிப்படியாக குறைந்து முடிவுக்கு வரும் என தமிழ்நாடு வெதர்மென் பிரதீப் ஜான் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு மாதங்களாக சென்னையில் வெயில் கொளுத்திய நிலையில், ஜில் அப்டேட் கொடுத்துள்ளார் தமிழ்நாடு வெதர்மேன். நேற்று இரவு தமிழ்நாடு வெதர்மேன் பிரதீன் ஜான் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “நாளை (அதாவது இன்று) முதல் அடுத்த 2 நாட்கள் காலை எழுந்தவுடன் கடல் ஓரத்தில் இருந்து அப்படியே மேகங்கள் நகர்ந்து கொண்டிருக்கும், லேசான மழை இருக்கும். எவ்வளவு நாளாகிவிட்டது.. இப்படி ஒரு காட்சியைப் பார்க்க. வாட்ஸ் அப் மற்றும் ட்விட்டர் ஸ்டேட்டஸ்களில் எல்லாம் இளையராஜா பாடல்கள் & டிரைவ், பால்கனியில் இருந்து பஜ்ஜி & டீ/காபி என இதமான அப்டேட்ஸ் தான்” எனக் கூறியுள்ளார்.
மேலும், இன்று பதிவிட்டுள்ள ட்வீட்டில், “உங்கள் ஜன்னல் அல்லது பால்கனியில் இருந்து அழகான காட்சியுடன் பஜ்ஜி / டீ / காபி மற்றும் இளையராஜா பாடல்களுடன் தயாராகுங்கள். உங்கள் வாகனங்களை இன்று கழுவ வேண்டாம், அதை மழை பார்த்துக்கொள்ளும். உங்கள் குடை அல்லது ரெயின்கோட் இல்லாமல் வெளியே செல்ல மறக்காதீர்கள். ஜூன் மாதம் தென்மேற்கு பருவமழைக்கு பெயர்போனது மற்றும் காற்று தென்மேற்கு திசையில் இருக்கும். UAC காரணமாக, கடலில் இருந்து வடகிழக்கில் இருந்து மேகங்கள் நகர்கின்றன. இது மிகவும் அரிதானது. 1991, 1996, 2014 ஆகிய ஆண்டுகளில் மட்டுமே இது நடந்துள்ளது. அதிலும் 1996 மற்றும் 1991 வரலாற்று சிறப்புமிக்கவை.” எனத் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாட்டில் இன்று 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்திருந்தது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, நாமக்கல், சேலம் மற்றும் தருமபுரி ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.