தினமும் போதை மாத்திரை கொடுத்து, பெற்ற மகளையே பாலியல் தொழிலில் தள்ளிய தாய், பெரியம்மா, சித்தி உள்ளிட்ட 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
மதுரையை சேர்ந்தவர் 13 வயது சிறுமி. இவரது தந்தை இறந்த பின், பாட்டியின் பராமரிப்பில் இருந்து வந்தார். சிறுமியை அவரது தாய் கடந்த மே மாதம் கடச்சனேந்தலில் உள்ள ஒரு வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார். பின்னர், பாட்டி வீட்டுக்கு திரும்பி வந்துள்ளார். அப்போது தாய் மற்றும் உறவினர்கள் தன்னை பாலியல் தொழிலில் கட்டாயப்படுத்தி ஈடுபடுத்தியதாக கூறி சிறுமி கதறி அழுதுள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பாட்டி, பேத்தியை மதுரை தல்லாகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையம் அழைத்துச் சென்று புகார் அளித்தார்.
அதில், ‘என்னை பாலியல் தொழிலில் ஈடுபடுமாறு தாய் கூறினார். சித்தி, பெரியம்மா உள்ளிட்டோர் கட்டாயப்படுத்தினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தபோது கடுமையாக தாக்கினர். மேலும், போதை மாத்திரைகளை கொடுத்து என்னை மயக்க நிலைக்கு கொண்டு சென்று பாலியல் தொழிலில் ஈடுபடுத்தினர். என்னை புவனேஷ், அருண்பாண்டி உள்ளிட்ட 3 பேர் பலாத்காரம் செய்ததோடு, சூடு வைத்தும் கொடுமை செய்தனர். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் நான் அங்கிருந்து தப்பி பாட்டி வீட்டுக்கு வந்துவிட்டேன்” என கூறியிருந்தார்.
இதையடுத்து, அந்த சிறுமி மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சிறுமியின் புகாரின்பேரில் போலீசார், அவரது தாய், பெரியம்மா, சித்தி மற்றும் புவனேஷ், அருண்பாண்டி, மணிகண்டன், சேகர் உள்ளிட்ட 8 பேரை போக்சோ வழக்குப்பதிந்து கைது செய்தனர். பெற்ற மகளுக்கு போதை மாத்திரை கொடுத்து தாயே பாலியல் தொழிலில் தள்ளியது மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.