தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் மொத்தம் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் இந்தாண்டு கோடை வெயில் மிகவும் உக்கிரமாக இருந்தது. கடந்த ஆண்டுகளை விட இந்தாண்டு வெப்பம் மிக மோசமாக இருந்தது. இதனால் பொதுமக்களால் வெளியே கூட செல்ல முடியாத ஒரு சூழலே இருந்தது. குறிப்பாகச் சென்னையில் வெயில் கொளுத்தியது. இந்தாண்டு சென்னையில் மட்டும் மொத்தம் 18 நாட்கள் வெப்பம் 40 டிகிரி செல்சியஸை தாண்டியது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
இதற்கிடையே, கடந்த வாரம் சென்னையில் நிலைமை தலைகீழாக மாறியது. ஜூன் மாதம் இதற்கு முன்பு இல்லாத அளவுக்கு வெப்பம் உச்சத்தில் இருந்த நிலையில், இப்போது சராசரி மழையைக் காட்டிலும் கூடுதலாக மழை பெய்துள்ளது. கடந்த வாரம் சென்னையில் பல இடங்களில் மழை கொட்டி தீர்த்தது. இதனால் சில இடங்களில் மழை நீர் தேங்கிய போதிலும், அவை சீக்கிரம் வடிந்துவிட்டது. கடந்த சில நாட்களாகச் சென்னையில் வெப்பம் குறைந்து சற்று மிதமான வானிலையே நிலவி வந்தது. இதற்கிடையே, இப்போது சென்னையில் கோடம்பாக்கம், சூளைமேடு, அரும்பாக்கம், அண்ணாநகர், முகப்போர், ஆவடி எனப் பல இடங்களில் நல்ல மழை பெய்து வருகிறது.
கோடை வெயில் முடிந்து மழை பெய்யத் தொடங்கியுள்ளதால், சென்னையில் வெப்பம் கணிசமாகக் குறைந்துள்ளது. இந்நிலையில், 3 மணி நேரத்திற்கு மொத்தம் 15 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு எனக் கூறப்பட்டுள்ளது. அதேபோல ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் மழை பெய்யும். மேலும், விழுப்புரம், சேலம், நாமக்கல், கோவை, நீலகிரி மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.