இ-ஸ்கூட்டர்கள் தான் இப்போது டாப் ட்ரெண்டிங்கில் உள்ளது. பெட்ரோல் விலை அதிகரித்து வருவதால், மக்கள் மின்சார வாகனங்கள் வாங்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்கு பல நிறுவனங்கள் ஒரே நேரத்தில் விதைத்து இருந்தாலும், மக்களிடத்தில் அதிகம் கொண்டு சென்றது ஓலா தான். அதனைத் தொடர்ந்து ஏதர் நிறுவனமும் பிரலமடைந்தது.
இந்த சூழலில், மின்சார ஸ்கூட்டர்கள் வாங்க நினைக்கும் பயனர்களுக்கு, எந்த ஸ்கூட்டர் சிறந்தது..? வங்கி கடன்கள் எவ்வளவு கிடைக்கும்..? என்பது போன்ற கேள்விகள் இருக்கலாம். இதனை நிவர்த்தி செய்யும் வகையில் சில தகவல்களை உங்களுக்காக கொண்டு வந்துள்ளோம்.
ஓலா ஸ்கூட்டர் கடன் வசதி :
பொதுவாக அனைத்து விதமான மின்சார ஸ்கூட்டர்களுக்கும் 36 மாதங்கள் முதல் 48 மாதங்கள் வரை வங்கிக் கடன் தவணை திட்டம் உள்ளது. இதில் ஓலா ஒரு படி முந்தி சென்று, நேரடியாக வங்கிகளுடன் கூட்டு சேர்ந்து, பயனர்களுக்கு அதிக தவணை காலத்தை வழங்குகிறது. ஓலா நிறுவனம் IDFC First வங்கி, L&T பைனான்ஸியல் சர்வீசஸ் ஆகிய நிதி நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்து அதிகப்படியான தவணைக் காலத்தை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. இதன்மூலம் வாடிக்கையாளர்கள் 60 மாதங்கள் வரை கடனை திரும்பச் செலுத்தும் தவணை காலத்தைப் பெற முடியும்.
அதுமட்டுமின்றி, வெறும் 6.99% விழுக்காடு வட்டி எனும் விகிதத்தில் கடன் கிடைக்கிறது. இது அரசு வங்கி வழங்கும் வீட்டு கடன் வட்டியை விட குறைந்தது. இதில் 3 ரகங்கள் கிடைக்கிறது. ஓலா எஸ்1, ஓலா எஸ்1 ப்ரோ, ஓலா எஸ்1 ஏர் ஆகிய மூன்று மாடல்கள் பல சிறப்பு அம்சங்களுடன் வருகிறது. இதில் ஓலா எஸ்1 ஏர் குறைந்த விலை மின்சார ஸ்கூட்டர் ஆகும். இதன் தொடக்க விலை ரூ.1,09,999 முதல் கிடைக்கிறது.
ஏதர் ஸ்கூட்டர் கடன் வசதி :
நாட்டில் தங்களுக்கென தனி பாணியில் பயணித்து வரும் ஏதர் நிறுவனமும், ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கி, பஜாஜ் பைனான்ஸ், ஹீரோ ஃபின்கார்ப் ஆகிய 3 நிதி நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்து கடன்களை வழங்குகிறது. நிறுவனத்தின் பிரத்யேக மாடல் ஏதர் 450X ஸ்கூட்டரை வெறும் ரூ.2,999 மாதத் தவணை செலுத்தி பயனர்கள் வீட்டிற்கு எடுத்துச் செல்லலாம். ஒரு முறை சார்ஜ் போட்டால், இந்த ஸ்கூட்டரை 146 கிமீ வரை இயக்கலாம். இதில் 3.7 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதற்கு 3 வருட வாரண்டியும் கிடைக்கிறது. 0 முதல் 80 விழுக்காடு வரை சார்ஜ் செய்ய 4 மணிநேரம் 30 நிமிடங்கள் எடுத்துக்கொள்கிறது. ஸ்கூட்டர் மணிக்கு 90 கிலோமீட்டர் வேகம் வரை செல்லும்.