வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே மேல்மாயில் செம்மண் குட்டையைச் சேர்ந்த வடிவரசனுக்கு 26 வயது ஆகிறது. இவர், அதே பகுதியை சேர்ந்த இவரது உறவினர் பெண்ணை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். அப்போது, இவர்களது காதலுக்கு பெண்ணின் வீட்டார் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் அந்த பெண் வடிவரசனை வேண்டாம் என்று கூறிவிட்டு, குடியாத்தத்தை சேர்ந்த ராணுவ வீரரை திருமணம் செய்து கொள்ள சம்மதித்துள்ளார். இவர்களுக்கு சில நாட்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் நடைபெற்று முடிந்தது.
இன்று ராணுவ வீருடன் அந்த பெண்ணுக்கு திருமணம் நடந்தது. முன்னதாக திருமணத்திற்காக ஏற்பாடுகளை பெண் வீட்டார் செய்திருந்தனர். இளம்பெண் காதலை கைவிட்டுவிட்டு வேறு ஒருவரை திருமணம் செய்வதை கண்டு வடிவரசன் ஆத்திரம் அடைந்தார். இதனால், மணமகள் வீட்டிற்கு பதிலடி கொடுக்க முடிவு செய்தார். அதன்படி, இளம்பெண்ணுடன் ஜோடியாக இருப்பது போல் இணைக்கப்பட்ட படத்தை வடிவரசன் போஸ்டர் அடித்தார். அந்த போஸ்டரை குடியாத்தம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் ஒட்டியுள்ளார்.
அந்த போஸ்டரில் வாழ்த்துக்கள் நண்பா என அவரது நண்பர்கள் திருமணம் வாழ்த்து தெரிவிப்பது போல் இடம்பெற்று இருந்தது. இதைப் பார்த்த பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் ஒட்டப்பட்டிருந்த வாழ்த்து போஸ்டர்களை கிழித்தனர். யார் இந்த போஸ்டர் ஒட்டினார்கள் என்று தெரியாமல் தவித்த பெற்றோர் போலீசில் சென்று கூறினார்கள். மேலும், நிச்சயம் செய்யப்பட்ட ராணுவ வீரருடன் தங்களது மகளுக்கு திருமணம் நல்லபடியாக நடத்த பாதுகாப்பு வழங்க கோரி பரதராமி போலீசில் பெற்றோர் புகார் கொடுத்தனர். இது குறித்து டி.எஸ்.பி. ராமமூர்த்தி உத்தரவின் பேரில் பரதராமி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
மேலும், இது சம்பந்தமாக போலீசார் வடிவரசனை பிடித்து விசாரித்த போது தான் காதலியின் திருமணத்தை நிறுத்த போஸ்டர் ஒட்டியது தெரியவந்தது. இதையடுத்து, வடிவரசனை போலீசார் கைது செய்தனர். காதலிக்கு வேறு ஒருவருடன் திருமணம் நடக்க இருந்த நிலையில் வாலிபர் தனக்குத்தானே வாழ்த்து போஸ்டர் அடித்து ஒட்டிய சம்பவம் குடியாத்தம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது ஒருபுறம் எனில் அந்த பெண்ணுக்கு திருமணம் இன்று இனிதே நடந்தது.