பெட்ரோல், டீசல் விலையை குறைப்பது தொடர்பாக மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயித்து வருகின்றன. அதன்படி, சென்னையில், 401-வது நாளாக இன்று பெட்ரோல், டீசல் விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. ஆண்டுக்கும் மேலாக பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63-க்கும், டீசல் லிட்டர் ரூ.94.24-க்கும் விற்கப்படுகிறது.
400 நாட்களுக்கு மேலாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் ஏற்படாத நிலையில் விலை குறைக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், 2024 மக்களவை தேர்தல் மற்றும் வரும் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் ராஜஸ்தான், சத்தீஸ்கர் உள்ளிட்ட 4 மாநில தேர்தல் வரவுள்ளதால் விலை குறையலாம் என தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி ஆகஸ்ட் மாதம் முதல் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் 4 முதல் 5 ரூபாய் வரை குறைக்கலாம் என்று கூறப்படுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்ததும் இதற்கு காரணம் என சொல்லப்படுகிறது. இதுதொடர்பாக மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.