காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மண்ணூர் பகுதியைச் சேர்ந்தவர் மோகன். இவரது மகன் நிரஞ்சன் (21) ஓட்டுனராக வேலை செய்து வருகிறார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த ரம்யா (19) என்பவரை காதலித்து வந்துள்ளார். இவர்களது காதல் விவகாரம் ரம்யாவின் வீட்டிற்கு தெரியவந்ததால், ரம்யாவின் பெற்றோர் கண்டித்துள்ளனர். இருப்பினும், அவர் பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி தானாக புறப்பட்டு நிரஞ்சன் வீட்டிற்கு சென்றுள்ளார். குறிப்பாக இருவரும் உறவினர்கள் என்பதால் உறவு முறையில், நிரஞ்சன் மற்றும் ரம்யா ஆகிய இருவரும் அண்ணன்-தங்கை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், இருவருக்கும் திருமணம் செய்து வைக்க வாய்ப்பில்லை என ரம்யாவுக்கு எடுத்துக் கூறியுள்ளனர். ஆனால், ரம்யா நிரஞ்சன் மீது இருந்த காதலை கைவிடவில்லை.
பின்னர், பெரியவர்கள் சமாதானம் செய்து ரம்யாவை அழைத்துச் சென்றுள்ளனர். இதனால், ரம்யாவின் பெற்றோர் அவரை திருவள்ளூர் மாவட்டம் புள்ளரம்பாக்கத்தில் உள்ள ரம்யாவின் பாட்டி வீட்டில் தங்க தங்க வைத்திருந்துள்ளனர். இந்தநிலையில், ரம்யாவை அவரது பெற்றோர் திருவள்ளூர் வீட்டில் தங்க வைத்திருந்த போது, நிரஞ்சன் அங்கு சென்று ரம்யாவை சந்தித்துள்ளார். அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் சிலர் நிரஞ்சனை அப்பொழுது கண்டித்து அனுப்பியுள்ளனர்.
இந்நிலையில், கடந்த 22ஆம் தேதி ரம்யாவின் தாய் மாமன்களான புகழேந்தி மற்றும் ஜனார்த்தனன் இருவரும் மண்ணூரில் உள்ள நிரஞ்சன் வீட்டிற்கு வந்து கட்டை மற்றும் கம்பியால் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த நிரஞ்சன், சுயநினைவை இழந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி தற்போது இறந்து போனார்.
இதையடுத்து, காதல் விவரத்தில் இளைஞரை கண்மூடித்தனமாக தாக்கிய வழக்கில் கைதாகி சிறையில் உள்ள ஜனார்த்தனன், புகழேந்தி ஆகிய இருவர் மீதும் தற்போது ஸ்ரீபெரும்புதூர் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்துள்ளனர். உறவு முறையில் குழப்பம் காரணமாக இளைஞர் அடித்துக் கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை கிளப்பியுள்ளது.