இல்லத்தரசிகளின் பொழுதுபோக்குக்கு முக்கிய பங்காற்றி வருவது சீரியல்கள் தான். முன்பெல்லாம் வாரத்துக்கு 5 நாட்கள் மட்டுமே ஒளிபரப்பாகி வந்த சீரியல், தற்போது வாரத்திற்கு 6 நாட்களும் ஒளிபரப்பாகி வருகிறது. இல்லத்தரசிகளை தாண்டி கணவன்மார்களையும், இளைஞர்களையும் கவரும் வண்ணம் சீரியல்கள் தற்போது விறுவிறுப்பாக கதைக்களத்துடன் எடுக்கப்பட்டு வருகின்றன.
இதனால் சீரியல்களுக்கான மவுசு பல மடங்கு எகிறி உள்ளது. அந்த வகையில், தற்போது டிரெண்டிங்கில் உள்ள சீரியல் என்றால் அது எதிர்நீச்சல் தான். கோலங்கள் என்கிற மெகாஹிட் சீரியலை இயக்கிய திருச்செல்வம் தான் எதிர்நீச்சல் சீரியலையும் இயக்கி வருகிறார். இந்த சீரியலுக்கு போட்டியாக பல்வேறு புது சீரியல்கள் களமிறங்கியும் அவற்றால் இந்த சீரியலின் டிஆர்பியை நெருங்க கூட முடியவில்லை.
தற்போதெல்லாம் இன்ஸ்டாகிராமை திறந்தாலே எதிர்நீச்சல் தொடரின் காட்சிகள் தான் மீம் டெம்பிளேட் ஆக மாறி உள்ளன. இப்படி மனிதர்களின் அன்றாட வாழ்வோடு ஒப்பிட்டு பார்க்கும் வகையில் வசனங்களும், திரைக்கதையும் உள்ளதால் இந்த சீரியல் டாப் கியரில் சென்றுகொண்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக இதில் குணசேகரன் என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ள மாரிமுத்து பேசும் ஒவ்வொரு டயலாக்கும் ரீல்ஸ்களில் ஆக்கிரமித்து உள்ளன.
இப்படி இல்லத்திரையில் தொடங்கி சோசியல் மீடியா வரை களைகட்டி வரும் எதிர்நீச்சல் சீரியல் டிஆர்பி-யில் ஒரு புதிய சாதனை படைத்துள்ளது. இந்த சீரியலின் முக்கிய பகுதியான ஆதிரையின் திருமணம் நடந்த வாரத்தில் மட்டும் சுமார் 11.16 டிஆர்பி ரேட்டிங் கிடைத்துள்ளதாம். இதுவரை தொலைக்காட்சி வரலாற்றில் 9.30 மணி ஸ்லாட்டில் ஒளிபரப்பான எந்த ஒரு சீரியலும் இந்த அளவுக்கு டிஆர்பி ரேட்டிங்கை பெற்றதில்லையாம்.