தீபாவளி பண்டிகை தமிழக மக்களுக்கு முக்கிய பண்டிகையாக கொண்டாடி வருகின்றனர். தீபாவளி பண்டிகை முன்னிட்டு சென்னை மற்றும் பிற ஊர்களில் இருந்து மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்வார்கள். அதில் நீண்ட தூர பயணம் செய்பவர்கள் ரயிலில் முன்பதிவு செய்கின்றனர். ஒவ்வொரு வருடமும் சுமார் 3 லட்சம் பேர் முன்பதிவு செய்கின்றனர். அந்த வகையில், இந்த ஆண்டு நவம்பர் 12ஆம் தேதி தீபாவளி பண்டிகை வர இருப்பதால், பொதுமக்கள் வசதிக்காக 120 நாட்களுக்கு முன்பாக டிக்கெட் முன்பதிவு வசதி தொடங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ரயில்வே அதிகாரி கூறுகையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரயில் பயணிகளின் வசதிக்காக ஜூலை 12ஆம் தேதி முதல் டிக்கெட் முன்பதிவு தொடங்குகிறது. அந்த வகையில், ஜூலை 12ஆம் தேதி முன்பதிவு செய்பவர்கள் நவம்பர் 9ஆம் தேதியும், ஜூலை 13ஆம் தேதி முன்பதிவு செய்பவர்கள் நவம்பர் 10ஆம் தேதியும், ஜூலை 14ஆம் தேதி முன்பதிவு செய்பவர்கள் நவம்பர் 11ஆம் தேதியும், ஜூலை 15ஆம் தேதி முன்பதிவு செய்பவர்கள் நவம்பர் 12ஆம் தேதி, ஜூலை 16ஆம் தேதி முன்பதிவு செய்பவர்கள் நவம்பர் 13-ஆம் தேதியும், ஜூலை 17ஆம் தேதி முன்பதிவு செய்பவர்கள் நவம்பர் 14ஆம் தேதியும், ஜூலை 18ஆம் தேதி முன்பதிவு செய்பவர்கள் நவம்பர் 15 ஆம் தேதியும் பயணம் செய்ய முடிகிறது.
மேலும் வட இந்திய ரயில்களுக்கான முன்பதிவு தேதியில் ஒன்று அல்லது இரண்டு நாட்கள் மாறுதல் இருக்கலாம் என கூறப்படுகிறது. அதேபோல் காலை 8 மணிக்கு அனைத்து வகுப்புகளுக்கான முன்பதிவு தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வருடம் ஞாயிற்றுக்கிழமை அன்று தீபாவளி பண்டிகை வர இருப்பதால் வியாழக்கிழமைகளில் இருந்தே மக்கள் சொந்த ஊருக்கு செல்வார்கள். அதனால் கடைசி நேரம் இல்லாமல் பயணிகள் முன்பதிவு செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.