தமிழ்நாட்டில் பொதுவாக சனாதனம் பற்றி திமுகவும், அதன் கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தான் அதிகம் பேசுவது வழக்கம். இன்னும் சொல்லப்போனால் திமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட தமிழகத்தைச் சார்ந்த பல கட்சிகள் இந்த சனாதனத்தை வைத்து தான் அரசியல் செய்து வருகிறார்கள் என்பதில் யாருக்கும் எந்தவித மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது.
அப்படி இருக்கும்போது தமிழக ஆளுநர் ஆரியன் ரவி சனாதன தர்மத்திற்கு ஆதரவாக சமீப காலமாக பேசி வருகிறார். இது தமிழக அரசியலில் மிகப்பெரிய புயலை கிளப்பியுள்ளது. சமீபத்தில் அவர் வடலூரில் வள்ளலாரின் 200வது ஜெயந்தி விழாவில் பேசினார்
அப்போது சனாதன தர்மத்தை பற்றி அவர் விரிவாக குறிப்பிட்டு அதனை வரலாறு பின்பற்றியதாக தெரிவித்துள்ளார். மேலும் சுமார் பத்தாயிரம் வருட கால பாரம்பரியத்தை கொண்ட சமாதான தர்மத்தின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்தவர் வள்ளலார் பெருமான் எனவும், காழ்ப்புணர்ச்சியாலும், அறியாமை காரணத்தாலும் சில மனிதர்கள் சனாதன தர்மத்தை பற்றி தவறான எண்ணப்போக்கை வைத்திருக்கிறார்கள் என கூறியுள்ளார்.
அத்துடன் சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் இருக்கின்ற ராகவேந்திரா மடத்தின் ஜெகத்குரு ஸ்ரீமன் மத்வாச்சாரியார் மூல மகா சமஸ்தானத்தின் 50வது ஆண்டு விழாவில் ஆளுநர் ரவி இன்று உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது சனாதான தர்மம் ஏற்பட காரணமாக இருந்தது தமிழ்நாடு தான் என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக விரிவாக பேசியுள்ள அவர் தமிழ்நாடு புனிதமான மாநிலம். மேலும் வளமான நாடு, பல வருடங்களாக புனிதர்களும், மகான்களும் வாழ்ந்த நாடு என்று குறிப்பிட்டுள்ளார். சனாதன தர்மம் ஏற்பட காரணமாக இருந்தது யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற வாசகம் தான் என்று தெரிவித்ததோடு அதுதான் சனாதன தர்மம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அதோடு இந்தியாவின் கலாச்சார அடையாளம் ஸ்ரீ ராமர் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையில் உள்ள மக்களை ராமர் ஆன்மீகத்தால் இணைத்துள்ளார். என்னில் உங்களையும்,உங்களில் என்னையும் காண்பதுதான் சனாதனம் என குறிப்பிட்டுள்ளார். மேலும் சனாதான தர்மம் என்பது தெற்கு இருந்துதான் ஆரம்பமானது. அதிலும் குறிப்பாக தமிழகத்தில் இருந்து தான் தொடங்கியது என்று கூறியுள்ளார்.