தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவருக்கு கடந்தாண்டு மயோசிடிஸ் என்கிற அறியவகை நோய் பாதிப்பு ஏற்பட்டது. இதனால், கடும் அவதிப்பட்ட சமந்தா, அதற்காக பல்வேறு சிகிச்சைகள் பெற்று அதிலிருந்து படிப்படியாக மீண்டு வருகிறார். இந்த நோய் பாதிப்பு முழுமையாக குணமடையவில்லை என்றாலும், அவர் தற்போது படங்களில் நடித்து வருகிறார். நடிகை சமந்தா கைவசம் தற்போது குஷி மற்றும் சிட்டாடெல் என்கிற வெப் தொடர் உள்ளது.
இதற்கிடையே, இந்த இரண்டு புராஜெக்டுகளையும் முடித்த பின்னர் நடிகை சமந்தா சினிமாவில் இருந்து ஓய்வெடுக்க உள்ளதாக கூறப்பட்டு வந்தது. அதனை உறுதிப்படுத்தும் வகையில் நடிகை சமந்தாவின் சமீபத்திய இன்ஸ்டாகிராம் பதிவும் அமைந்துள்ளது. அதில் ஒரு பதிவில் கடைசி 3 நாட்கள் என்று குறிப்பிட்டுள்ளார். மற்றொன்றில் கடந்த 6 மாதங்கள் மிகவும் கடினமாக இருந்ததாக குறிப்பிட்டு செல்ஃபி புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
சமந்தா கடைசி 3 நாட்கள் என குறிப்பிட்டுள்ளதால், அவர் அதன்பின்னர் சிகிச்சைக்கு செல்ல உள்ளார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. மற்றொரு பதிவில் 6 மாதம் மிகவும் கடினமாக இருந்ததாக அவர் குறிப்பிட்டு இருந்தார். அதற்கு காரணம், அவர் எடுத்து வந்த சிகிச்சைகள் தான். மயோசிடிஸ் நோய் பாதிப்பில் இருந்து மீள்வதற்காக நடிகை சமந்தா, ஹைபர் பர்ரிக் ஆக்சிஜன் தெரபி என்கிற சிகிச்சையை எடுத்து வந்துள்ளார். இது கொஞ்சம் ரிஸ்க்கான சிகிச்சை என்று கூறப்படுகிறது.
ஹைபர் பர்ரிக் ஆக்சிஜன் தெரபி என்றால் தூய ஆக்சிஜனை சுவாசிக்க வேண்டிய ஒரு சிகிச்சை ஆகும். இந்த சிகிச்சையை மேற்கொள்பவர்கள் ஒரு தனி அறையில் அடைக்கப்படுவர். அந்த அறையில் காற்றழுத்தம் இயல்பை விட 2 முதல் 3 மடங்கு அதிகமாக இருக்குமாம். இந்த சிகிச்சை 2 மணிநேரம் வரை நீடிக்குமாம். இந்த சிகிச்சையின் மூலம் இரத்தத்தில் ஆக்சிஜன் அளவை அதிகப்படுத்தி நோயை குணப்படுத்த முடியும் என்று கூறப்படுகிறது.
இது பயனுள்ள சிகிச்சையாக இருந்தாலும், இதில் ரிஸ்க்கும் உள்ளதாம். பொருத்தமற்ற முறையில் இது சில மோசமான விளைவுகளையும் ஏற்படுத்தக்கூடியது என்று சொல்லப்படுகிறது. தற்போது மயோசிடிஸ் நோய் பாதிப்பில் இருந்து மீண்டு வர நடிகை சமந்தா இப்படி ஒரு கடினமான சிகிச்சையை எடுத்து வருவதை அறிந்த ரசிகர்கள், வருத்தம் அடைந்துள்ளனர். அவர் விரைவில் நலம் பெற வேண்டும் என பிரார்த்தனையும் செய்து வருகின்றனர்.