கிருஷ்ணகிரி பட்டாசு குடோனில் நிகழ்ந்த பயங்கர வெடி விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உள்பட 8 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் பழைய பேட்டையில் உள்ள உணவகத்தில் கேஸ் சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் வெடித்து சிதறிய தீப்பிழம்புகள் உணவகத்தின் அருகில் உள்ள பட்டாசு குடோனுக்கும் பரவியது. இதில் அங்கிருந்த பட்டாசுகளில் தீ பற்றவே அவை பெருமளவில் வெடித்து சிதறியிருக்கின்றன. அதோடு வெடி விபத்து நிகழ்ந்த இடத்தில் 3 வீடுகளும் இடிந்து தரைமட்டமாகியுள்ளன. உணவகத்தில் உணவு அருந்திக் கொண்டிருந்தவர்களும் கட்டிட இடிபாடுகளில் சிக்கினர்.
இந்த விபத்தில், பட்டாசு கடை உரிமையாளர் ரவி, அவரது மனைவி ஜெயஸ்ரீ, மகள் ருத்திகா, மகன் ருத்தீஷ், உணவக உரிமையாளர் ராஜேஸ்வரி, இம்ரான், இப்ராஹிம் ஆகியோர் உயிரிழந்தனர். பொதுமக்கள் அதிகமாக வசிக்கும் பகுதியில் பட்டாசு குடோன் வைக்க அனுமதி அளித்தது எப்படி என போலீசார் விசாரித்து வருகின்றனர். இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்னர்.
விபத்து நடந்த இடத்தில் மாவட்ட ஆட்சியர் சரயு, காவல்துறை கண்காணிப்பாளர் சரோஜ் குமார் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். மளமளவென பற்றி எரிந்த தீயை, தீயணைப்புத்துறையினர் போராடி கட்டுக்குள் கொண்டு வந்தனர். கட்டிட இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் கவலைக்கிடமான வகையில் சிகிச்சை பெற்று வருவதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.