108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதாக விளங்குவது திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோயில். இந்த கோயிலில் மொத்தம் 21 கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றுள் மிகப் பெரிதான இராசகோபுரம், 72 மீட்டர் (236 அடி) உயரத்துடன், தென்னிந்தியாவிலேயே பெரிய கோபுரமாக விளங்குகின்றது. இது 17-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாயினும், 1987ஆம் ஆண்டு முழுமையாகக் கட்டி முடிக்கப்பட்டது. இந்த கோவிலுக்கு நன்கு வழிகளில் நான்கு கோபுரங்கள் அமைக்கப்ட்டுள்ளன. இதில் கிழக்கு வாசலில் நுழைவு கோபுரத்தின் முதல் நிலை மற்றும் 2வது நிலை சுவர்களில், சில தினங்களாக விரிசல் ஏற்பட்டு இருந்தன. இதனை பராமரிக்கும் பணிக்காக கோயில் நிர்வாகம் சார்பில் டெண்டர் விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது விரிசல் அதிகமான நிலையில், நள்ளிரவு 1.50 மணிக்கு, கிழக்கு வாசலில் முதல் நிலை கோபுரத்தின் சுவர், மளமளவென இடிந்து விழுந்தது. நள்ளிரவு நேரத்தில் சுவர் இடிந்து விழுந்ததால் பெரிய அளவில் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. மின் கம்பிகள் மீது சுவர் விழுந்துள்ளதால் அந்தப் பகுதியில் மின் சேதம் ஏற்பட்டுள்ளது. மேலும் இடிந்து விழுந்த சுவர்களின் கற்களை அப்புற படுத்தும் பணியில் கோயில் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மிகவும் பிரசித்திபெற்ற கோயிலில் கோபுரத்தின் சுவர் இடிந்து விழுந்தது, அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.