பீகார் மாநிலத்தின் கயா மாவட்டத்தில் உள்ள ஃபதேபூர் காவல் நிலைய எல்லைக்குள், கிராம மருத்துவரை மரத்தில் கட்டி வைத்து கொடூரமாக தாக்கிய சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம் ஜூராங் கிராமத்தை சேர்ந்த மருத்துவர் ஜிதேந்திர யாதவ், பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமியின் தாய்க்கு மருத்துவ உதவி வழங்கினார். இதனை விரும்பாத கிராம மக்கள் மருத்துவரை மரத்தில் கட்டி வைத்து கொடூரமான முறையில் ரத்தம் சொட்ட தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த அதிர்ச்சி சம்பவத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது. அதில், ஒரு மரத்தில் கட்டப்பட்ட நிலையில் உள்ள மருத்துவரை சுற்றி நின்று பார்த்துக் கொண்டிருக்கும் கிராம மக்கள், ஒரு போலீசார் அவரை கழற்றி விடும் காட்சி பதிவாகியுள்ளது.
தகவல் கிடைத்ததும், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மருத்துவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அவர் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், இந்த வீடியோவை பகிர்ந்த ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ், பீகார் மாநில அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.
அவர் பதிவில், “பீகார் இப்போது தாலிபான் ஆட்சி போல மாறிவிட்டது. ஒரு பெண்ணின் தாய்க்கு சிகிச்சை அளித்த மருத்துவர், மரத்தில் கட்டப்பட்டு அடித்துக்கொலை செய்யப்படுகிறார். இது எப்படிப்பட்ட சட்ட-ஒழுங்கு நிலைமையை காட்டுகிறது?” எனக் கேள்வி எழுப்பிய அவர், 20 ஆண்டுகால ஊழல் ஆட்சி, அதிகாரிகளின் செயலிழப்பு, அரசு அமைப்புகளின் முற்றிலும் சிதைவு என அரசை குற்றம் சாட்டினார். இது போன்ற சம்பவங்கள் பீகாரில் சட்டம் மற்றும் நிர்வாகத்தின் தேக்க நிலையை காட்டுவதாகவும், பொதுமக்கள் தாங்களே நீதிபதியாக மாறிவருவதை சுட்டிக்காட்டுவதாகவும் சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பதிவாகி வருகின்றன.
Read more: 18 ஆண்டுகளுக்குப் பிறகு RCB சாம்பியன்.. விஜய் மல்லையாவின் வாழ்த்து பதிவுக்கு SBI கிண்டல் கமெண்ட்..!!