காவிரி மேலாண்மை வாரியத்தின் 22-வது கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில், தமிழ்நாடு அரசின் கோரிக்கையை கர்நாடகா ஏற்காததால், தமிழக அதிகாரிகள் கூட்டத்திலிருந்து பாதியிலேயே வெளியேறினர். இந்நிலையில், தமிழ்நாட்டிற்கு உரிய தண்ணீரைத் திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவிட்டது.
இதுகுறித்து, தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறுகையில், ”ஆகஸ்ட் 11 வரை 53.77 டி.எம்.சி. தண்ணீரை தமிநாட்டிற்கு கர்நாடக அரசு வழங்கியிருக்க வேண்டும். ஆனால், 15.79 டி.எம்.சி. தண்ணீர்தான் வழங்கப்பட்டுள்ளது. ஆகையால், இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றத்துக்குச் செல்வதைத் தவிர வேறு வழியில்லை” என்று அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், மைசூருவில் செய்தியாளர்களிடம் பேசிய சித்தராமையா, ”கேரளா, குடகு ஆகிய பகுதிகளில் மிக குறைவான அளவே மழை பெய்துள்ளது. இதனால், எங்களிடம் போதிய தண்ணீர் இல்லை” என்று கூறினார். தமிழ்நாட்டிற்உ தரவேண்டிய தண்ணீரைத் திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு, காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவிட்டுள்ள நிலையில், முதல்வர் சித்தராமையா தங்களிடமே போதிய தண்ணீர் இல்லை என்று கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.