குஜராத்தில் நடந்த விமான விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கையானது 270 ஆக அதிகரித்துள்ளதாகவும், டிஎன்ஏ சோதனையில் 11 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அகமதாபாத் அரசு மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குஜராத்தின் அகமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் விமான நிலையத்தில் இருந்து லண்டன் நோக்கி புறப்பட்ட போயிங் 788 ட்ரீம் லைனர் விமானம் 30 விநாடிகளிலேயே விபத்துக்குள்ளானது. மருத்துவ கல்லூரியின் விடுதியின் மீது விமானம் விழுந்து தீப்பிடித்ததில் விமானத்தில் இருந்தவர்கள் மட்டுமல்லாமல் விடுதியில் இருந்த மருத்துவ கல்லூரி மாணவர்களும் சிக்கினார்கள்.
விமானத்தில் மொத்தம் 242 பேர் இருந்த நிலையில் ஒருவர் விமானத்தில் இருந்து குதித்து உயிர்தப்பினார். விபத்து நிகழ்ந்த இடத்தில் இருந்து மொத்தம் 265 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன. இந்நிலையில் சம்பவ இடத்தில் இருந்து மேலும் சில சடலங்களும், உடல் பாகங்களையும் மீட்பு குழுவினர் கண்டறிந்துள்ளனர். விபத்து நிகழ்ந்த இடத்தில் ஒன்றிய மற்றும் மாநில அரசின் மீட்பு குழுவினருடன் தேசிய பாதுகாப்பு படை குழுவும் இணைந்துள்ளது. இதனை தொடர்ந்து விபத்தில் பலி எண்ணிக்கையானது 270ஆக அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அகமதாபாத் அரசு மருத்துவமனைக்கு இதுவரை மொத்தம் 270 உடல்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. இவற்றில் 8 பேரின் உடல்கள் அடையாளம் காணும் வகையில் இருந்ததால் டிஎன்ஏ சோதனை தேவையில்லை என்று முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து 8 பேரின் உடல்கள் மருத்துவமனையில் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் டிஎன்ஏ சோதனையில் 11 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அகமதாபாத் அரசு மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து சம்பந்தப்பட்ட உறவினர்களிடம் உடல்களை ஒப்படைப்பதற்கான நடைமுறைகள் தொடங்கி உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இறந்தவர்களின் உறவினர்களுக்கு இது குறித்து தொலைபேசி மூலமாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உயிர் பிழைத்த ஒரே நபரான விஸ்வாஸ் குமார் ரமேஷ் நிலையாக இருப்பதாகவும், ஆபத்தில் இருந்து மீண்டுள்ளதாகவும் டாக்டர் படேல் கூறினார். விபத்தில் காயமடைந்தவர்களில் பெரும்பாலோர் சிகிச்சை பெற்று வருவதாகவும், ஒன்று அல்லது இரண்டு பேரின் நிலை இன்னும் கவலைக்கிடமாக இருப்பதாகவும் அவர் கூறினார்.
“டிஎன்ஏ பொருத்தும் செயல்முறை கவனமாக செய்யப்பட வேண்டும். இது சட்ட மற்றும் மருத்துவ தாக்கங்களைக் கொண்டுள்ளது, எனவே இதில் அவசரப்பட முடியாது” என்று டாக்டர் படேல் கூறினார். அதே நேரத்தில், டிஎன்ஏ பொருத்தும் செயல்முறையை விரைவுபடுத்துவதற்காக, குஜராத்தின் உள்துறை இணையமைச்சர் ஹர்ஷ் சங்வி சனிக்கிழமை (ஜூன் 14) மாநில தடய அறிவியல் ஆய்வக (எஃப்எஸ்எல்) அதிகாரிகளுடன் ஒரு சந்திப்பை நடத்தினார்.
“குஜராத்திலிருந்து தடயவியல் நிபுணர்களைத் தவிர, மத்திய அரசால் அனுப்பப்பட்ட பல நிபுணர்களும் டிஎன்ஏ மாதிரிகளை பொருத்த 24 மணி நேரமும் உழைத்து வருகின்றனர். முடிவுகள் வந்தவுடன், உடல்களை குடும்பத்தினரிடம் ஒப்படைக்கும் வகையில், அவற்றை சிவில் மருத்துவமனைக்கு அனுப்புகிறோம்” என்று அவர் கூறினார்.
குஜராத் நிவாரண ஆணையர் மற்றும் வருவாய் செயலாளர் அலோக் பாண்டே கூறுகையில், விபத்தில் இறந்தவர்களில் குஜராத்தின் 18 மாவட்டங்களைச் சேர்ந்த குடிமக்கள் அடங்குவர். குடும்பங்களுடன் ஒருங்கிணைக்க 230 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றும், துயரத்தில் கொல்லப்பட்ட 11 வெளிநாட்டினரின் உறவினர்களும் தொடர்பு கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
விசாரணை நடத்த குழு அமைப்பு: பிரேத பரிசோதனை அறை தொடர்பான விஷயங்களைக் கையாளும் காவல் ஆய்வாளர் சிராக் கோசாய் கூறுகையில், “வெள்ளிக்கிழமை (ஜூன் 13) வரை, இறந்தவரின் உறவினர்கள் சுமார் 220 பேர் தங்கள் மாதிரிகளைக் கொடுக்க காவல்துறையை அணுகியுள்ளனர். மாதிரிகள் பிஜே மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பப்பட்டுள்ளன” என்றார்.
விமான விபத்துக்கான மூல காரணத்தைக் கண்டறியவும், இயந்திரக் கோளாறு, மனிதத் தவறு மற்றும் ஒழுங்குமுறை இணக்கம் உள்ளிட்ட பிற காரணிகளை மதிப்பிடவும், மத்திய அரசு சனிக்கிழமை (ஜூன் 14) உயர்மட்ட பல்துறைக் குழுவை அமைத்தது. மத்திய உள்துறை செயலாளர் கோவிந்த் மோகன் தலைமையிலான குழு மூன்று மாதங்களுக்குள் தனது அறிக்கையை சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க தேவையான மேம்பாடுகளை மத்திய உள்துறை செயலாளர் தலைமையிலான மத்தியக் குழு பரிந்துரைத்து, பொருத்தமான நிலையான இயக்க நடைமுறைகளை (SOPs) தயாரிக்கும் என்று சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற சம்பவங்களைத் தடுப்பதற்கும் சமாளிப்பதற்கும் சிறந்த சர்வதேச நடைமுறைகளும் SOP-யில் அடங்கும் என்றும் அதன் முதல் கூட்டம் திங்கள்கிழமை (ஜூன் 16, 2025) நடைபெறும் என்றும் அது கூறியுள்ளது.