கடந்த 1978ஆம் வெளிவந்த ’பிரணம் கரிது’ என்ற திரைப்படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமானார் சிரஞ்சீவி. பின்னர் மனவூரி பாண்டவுலு, தாயாரம்மா பங்கரய்யா, கைதி, ஸ்வயம்க்ருஷி, ருத்ரவீனா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவர், தெலுங்கு மற்றும் தமிழில் 150-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். தற்போது சிரஞ்சீவி நடிப்பில் ‘போலோ சங்கர்’ என்ற திரைப்படம் அண்மையில் வெளியானது.
தமிழில் வெளியான ‘வேதாளம்’ படத்தின் ரீமேக்கான இந்தத் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இப்படத்தின் படப்பிடிப்பின்போது, சிரஞ்சீவி முழங்கால் வலியால் கடுமையாக அவதிப்பட்டதாக நடிகை தமன்னா கூறியிருந்தார். நீண்ட நாட்களாகவே முழங்கால் வலியால் அவதிப்பட்டு வந்த சிரஞ்சீவி, அறுவை சிகிச்சை செய்துகொள்ள முடிவு செய்து டெல்லி உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு முழங்கால் அறுவை சிகிச்சை நடந்து முடிந்துள்ளது.
இந்நிலையில், நடிகர் சிரஞ்சீவி ஒரு வாரம் மருத்துவமனையிலேயே மருத்துவர்கள் கண்காணிப்பில் இருப்பார் என்றும் அதன்பிறகே ஹைதராபாத் திரும்புவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வீட்டில் 2 அல்லது 3 மாத ஓய்வுக்கு பிறகு புதிய படங்களில் நடிக்கவுள்ளார். நடிகர் சிரஞ்சீவிக்கு ஏற்கனவே 2016இல் வலது மற்றும் இடது தோள்பட்டைகளில் அறுவை சிகிச்சைகள் நடந்தது. சிரஞ்சீவி போலவே முழங்கால் வலி பிரச்சனையால் அவதிப்பட்டு வரும் பிரபாசும் அறுவை சிகிச்சை மேற்கொள்ள திட்டமிட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.