இழப்பீடு கோரும் தீர்ப்பாயத்துக்கு, விபத்து தொடர்பான எந்த அறிக்கை அனுப்பப்பட்டாலும், அதை இழப்பீடு கோரும் மனுவாக கருதவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர், மலரவன் என்பவர் ஒரகடத்தில் இருந்து இரு சக்கர வாகனத்தில் வந்தபோது, தனியார் பேருந்து மோதியதில் படுகாயம் அடைந்தார். இதையடுத்து, மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் இழப்பீடு கேட்டு, சென்னையில் உள்ள தீர்ப்பாயத்தில், கடந்த ஏப்ரல் 19ல் வழக்கு தொடர்ந்தார். இழப்பீடு கோருவதற்கான காலவரம்பு முடிந்ததாக கூறு அந்த மனுவை, ஏப்ரல் 25ல் தீர்ப்பாயம் திருப்பி அனுப்பியது. இதையடுத்து, இழப்பீடு கோரும் மனுவை விசாரணைக்கு ஏற்க உத்தரவிடக் கோரி, உயர் நீதிமன்றத்தில் மலரவன் மனு தாக்கல் செய்திருந்தார்.
அதில், விபத்தில் இடது காலில் முறிவு ஏற்பட்டதாக் அன்றாட வாழ்வுக்கே குடும்பத்தினரை சார்ந்து இருக்க வேண்டிய நிலை உள்ளதாகவும், ‘படுக்கையில் இருந்ததால், ஆறு மாதங்களுக்குள் மனு தாக்கல் செய்ய முடியவில்லை என்றும் 8 நாட்கள் தாமதமாக மனுதாக்கல் செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன், விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கில் நீதிமன்றத்திற்கு உதவ என்.விஜயராகவனை, ‘அமிகஸ்க்யூரி’ ஆக நியமித்தார்.
கடந்த 1939ல் இயற்றப்பட்ட மோட்டார் வாகன சட்டம், 1988ல் ரத்து செய்யப்பட்டு, 1989 ஜூலையில் புதிய சட்டம் அமலுக்கு வந்தது. இந்தச் சட்டத்தில் இழப்பீடு கோரும் மனுவை, ஆறு மாதங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என, வரம்பு நிர்ணயிக்கப்பட்டது. இருந்தாலும், மேலும் ஆறு மாதங்கள் அவகாசம் வழங்க, நீதிமன்றத்துக்கு அதிகாரம் இருந்தது; அதுவும், 1994ல் நீக்கப்பட்டது. கடந்த ஆண்டு ஏப்ரலில், புதிய சட்டத் திருத்தம் அமலுக்கு வந்தது.
அதில், ‘விபத்து நடந்த ஆறு மாதங்களுக்குள் விண்ணப்பிக்கவில்லை என்றால், இழப்பீடு கோரும் மனுவை ஏற்க முடியாது, ஆனால், இழப்பீடு கோரும் தீர்ப்பாயத்துக்கு, விபத்து தொடர்பான எந்த அறிக்கை அனுப்பப்பட்டாலும், அதை இழப்பீடு கோருவதற்கான விண்ணப்பமாக கருத வேண்டும்’ என கூறப்பட்டுள்ளது. அதன்படி, இந்த வழக்கில், விபத்து நடந்த இரண்டு நாட்களில், முதல் தகவல் அறிக்கையை, ஒரகடம் போலீசார் பதிவு செய்து உள்ளனர். மனுதாரர் தாக்கல் செய்த மனுவை, இழப்பீடு கோருவதற்கான நினைவூட்டலாக கருதி விசாரணைக்கு எடுக்க, தீர்ப்பாயத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.