கடந்த வாரம் தாக்குதல்கள் தொடங்கியதிலிருந்து இஸ்ரேலிய தாக்குதல்களில் 400 க்கும் மேற்பட்ட ஈரானியர்கள் கொல்லப்பட்டதாகவும், நேற்றைய தாக்குதலில் மட்டும் 3 மூத்த தளபதில் பலியானதாகவும் ஈரானின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான போர் தொடர்ந்து 9 நாட்களாக நடந்து வருகிறது. சனிக்கிழமை (ஜூன் 21, 2025) இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் பல வான்வழித் தாக்குதல்களை நடத்தினர். இதற்கிடையில், அணுசக்தி பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்காக ஐரோப்பிய இராஜதந்திரிகள் ஜெனீவாவில் ஈரானிய வெளியுறவு அமைச்சருடன் ஒரு சந்திப்பை நடத்தினர்.
ஈரானின் அனைத்து அணுசக்தி தளங்களையும் அழிக்கும் வரை, இஸ்ரேலிய இராணுவம் நிறுத்தப் போவதில்லை என்று இஸ்ரேல் தெளிவாகக் கூறுகிறது. அதனால்தான் இஸ்ரேல் தனது நிர்ணயிக்கப்பட்ட இலக்கின்படி இந்தப் போரில் முன்னேறி வருகிறது.
இருப்பினும், ஊடக அறிக்கைகளின்படி, டொனால்ட் டிரம்ப் இஸ்ரேல்-ஈரான் மோதலில் இணைவது குறித்து பரிசீலித்து வருகிறார். இதற்கிடையில், B-2 ஸ்டெல்த் குண்டுவீச்சு விமானங்கள் அமெரிக்காவிலிருந்து புறப்பட்டு பசிபிக் பெருங்கடலை நோக்கிச் செல்கின்றன. இந்தநிலையில், இஸ்ரேலுடன் மோதலில் ஈடுபட வேண்டாம் என்றும், இல்லையெனில் அது அனைவருக்கும் ஆபத்தானது என்றும் ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி அமெரிக்காவை எச்சரித்துள்ளார்.
அதாவது, ஜெனீவாவில், அப்பாஸ் அரக்சி ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக் கொள்கைத் தலைவர் மற்றும் பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியைச் சேர்ந்த அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இஸ்ரேல் தாக்குதல்களை நிறுத்தும் வரை ஈரான் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தாது என்று அரக்சி கூறினார்.
கடந்த வாரம் முதல், இஸ்ரேலிய உளவுத்துறையுடன் தொடர்புடைய 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஈரானிய காவல்துறை தெரிவித்ததாக ஃபார்ஸ் நியூஸ் தெரிவித்துள்ளது. கடந்த வாரம் தாக்குதல்கள் தொடங்கியதிலிருந்து இஸ்ரேலிய தாக்குதல்களில் 400 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாகவும், 3,056 பேர் காயமடைந்தனர். இந்த தாக்குதல்களில் காயமடைந்தவர்களில் பெரும்பாலோர் பொதுமக்கள் என்று ஈரானின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலின் தாக்குதல்களில் காயமடைந்தவர்களில், 2,220 பேர் சுகாதார அமைச்சக மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். அதே நேரத்தில் 232 பேர் தாக்குதல் நடந்த இடத்திலேயே வெளிநோயாளிகளாக சிகிச்சை பெற்றனர். இந்தக் காலகட்டத்தில், நாடு முழுவதும் உள்ள எங்கள் மருத்துவக் குழுக்கள் காயமடைந்தவர்களுக்கு 457 அறுவை சிகிச்சைகளைச் செய்துள்ளன.
தென்மேற்கு ஈரானின் அஹ்வாஸில் பல சக்திவாய்ந்த வெடிப்புகள் பதிவாகியுள்ளன, அதே நேரத்தில் இஸ்ரேலிய இராணுவம் அப்பகுதியில் உள்ள இராணுவ உள்கட்டமைப்பு மீது தாக்குதல்களை நடத்தி வருவதாகக் கூறியது.
சனிக்கிழமையன்று இஸ்ரேலிய இராணுவம், இஸ்ஃபஹானில் உள்ள ஈரானிய அணுசக்தி நிலையத்தை இரவில் மீண்டும் தாக்கியதில், மூன்று மூத்த ஈரானிய தளபதிகளைக் கொன்றதாகக் கூறியது குறிப்பிடத்தக்கது,
ஈரானில் இணைய சேவை மீண்டும் கிடைக்க ஆரம்பித்துள்ளது. இஸ்ரேலின் சைபர் பாதுகாப்பு அச்சுறுத்தல்களைக் காரணம் காட்டி ஈரானில் வசிக்கும் 90 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு இந்த வாரத்தின் தொடக்கத்தில் தொலைபேசி மற்றும் ஆன்லைன் சேவைகள் துண்டிக்கப்பட்டன.
தற்போது இணைய சேவை ஓரளவு மீளத் தொடங்கியுள்ளதால், ஈரானியர்கள் சில நாட்களுக்குப் பிறகு தங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரை தொடர்பு கொண்டு பேசும் வாய்ப்பை பெற்றுள்ளனர்.