கூகுள் பே, போன் பே, பேடிஎம் உள்ளிட்ட ஆன்லைன் பணப்பரிவர்த்தனைகளின்போது, தவறான அக்கவுண்ட்டிற்கு பணம் அனுப்பிவிட்டால் உடனடியாக செய்யவேண்டும் என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
நாட்டில் இப்போது டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகள் கணிசமாக அதிகரித்து வருகிறது. அதாவது வங்கிக் கிளைகள் அல்லது ஏடிஎம்களில் நீண்ட வரிசையில் மணிக்கணக்காக கால் கடுக்க காத்திருந்து நிற்பதை விட, ஆன்லைன் பேமெண்ட்டுகள் பணம் அனுப்ப எளிதான மாற்றாக மாறிவிட்டன. இருப்பினும், ஆன்லைனில் பரிவர்த்தனை மேற்கொள்ளும்போது, தவறான நபரின் கணக்குக்கு தொகை பரிமாறப்படும் சிக்கலை பெரும்பாலான மக்கள் சந்திக்கின்றனர். நீங்கள் தவறான எண்ணிற்கு ஆன்லைன் மூலம் பணம் செலுத்திவிட்டால், பதற்றம் கொள்ளாமல் நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் GPay, PhonePe, Paytm போன்ற யூபிஐ பேமெண்ட் தளங்களின் வாடிக்கையாளர் சேவையை தொடர்பு கொள்ள வேண்டியது தான். பரிவர்த்தனை விவரங்களைப் பகிர்வதன் மூலம் புகார் அளிக்க வேண்டும் மற்றும் இதுகுறித்து நீங்கள் உங்கள் வங்கியிலும் புகார் செய்ய வேண்டும்.
ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களின்படி, தவறாகப் பணம் செலுத்தினால் புகார் அளிக்கப்பட்ட 48 மணி நேரத்திற்குள் பணத்தைத் திரும்பப் பெறலாம் என்று பரிந்துரைக்கிறது. மேலும் தவறாக பரிவர்த்தனை செய்யப்பட்ட 3 நாட்களுக்குள் புகார் பதிவு செய்யப்பட வேண்டும் என்பதையும் நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். இதேபோல் யூபிஐ அல்லது நெட் பேங்கிங் மூலம் தவறான வங்கிக் கணக்கில் பணம் செலுத்திவிட்டீர்கள் என்றால் உடனே 18001201740 என்ற எண்ணை அழைத்து புகார் அளிக்க வேண்டும். புகார் அளித்த பிறகு நீங்கள் கணக்கு வைத்திருக்கும் சம்பந்தப்பட்ட வங்கிக்குச் சென்று, அதில் உள்ள அனைத்து தகவல்களுடன் ஒரு படிவத்தை நிரப்ப வேண்டும்.
உங்களுக்கு வங்கி உதவி செய்ய முன்வரவில்லை என்றால் அது குறித்து இந்திய ரிசர்வ் வங்கி ஒம்புட்ஸ்மேனிடம் bankingombudsman.rbi.org.in என்கிற முகவரியில் புகார் செய்ய வேண்டும். மொபைலிலுள்ள பரிவர்த்தனை தகவலை ஒருபோதும் டெலீட் செய்துவிடக்கூடாது, ஏனெனில் அதிலுள்ள PPBL எண் உங்களுக்கு புகாரளிக்க தேவைப்படும். புகார் படிவத்தில் மற்ற அனைத்து விவரங்கள் மற்றும் உங்கள் குறைகளுடன் இந்த எண்ணைக் குறிப்பிட மறக்காதீர்கள்.