அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை வருங்கால முதலமைச்சர் என அமைச்சர் அன்பில் மகேஷ் சொன்ன சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் கல்வி அடையாளங்களில் ஒன்றாக திகழும் ஹோலி கிராஸ் கல்லூரியில் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினர்களாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் கே.என்.நேரு, அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், “100-வது ஆண்டு விளையாட்டு போட்டிக்கு தகுதியான, சரியான நபரை தான் சிறப்பு விருந்தினராக அழைத்துள்ளீர்கள். அமைச்சர் உதயநிதி நீட் தேர்வுக்கு எதிராக நடைபெற்ற அறப்போராட்டத்தில் எழுப்பிய உரை வரலாற்று சிறப்பு மிக்கது. தொடர்ந்து செயலாளராக இருந்தவர் தற்போது எங்கள் தலைவனாக உள்ளார்.
மேலும், விளையாட்டுத்துறையை மேம்படுத்துவதற்காக உதயநிதி ஸ்டாலின் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதேசமயம் பொது சேவை பணியில் தொடர்ந்து முழுமையாக ஈடுபடுத்தி கொண்ட மிக பெரிய போராளி தான் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். தாத்தா உருவாக்கிய துறையை பேரன் வளர்த்து வருகிறார். உழைப்பாளி, போராளி, தமிழ்நாட்டின் வருங்கால முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆவார்” என்று பேசியுள்ளார்.