தென்மேற்கு பருவமழை வலுவிழந்து விட்டதாகவும், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இயல்பை விட 9% குறைவான மழைப்பொழிவு பதிவாகி உள்ளதாகவும் சென்னை வானிலை மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டிற்கு பொதுவாக விவசாயம் மற்றும் குடிநீருக்கு கேரளா, கர்நாடகா, ஆந்திர மாநிலங்களை நம்பியே இருக்கிறோம். தமிழ்நாட்டிற்கு என்று பெரிய ஆறுகள் கிடையாது. தாமிரபரணி மட்டுமே தமிழ்நாட்டில் உதித்து மாநிலத்திற்குள்ளேயே முடிகிறது. தாமிரபரணி தண்ணீர் நெல்லை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருக்கும் கிராமங்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து வருகிறது.
இந்நிலையில், கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் நடப்பாண்டு குறைவான மழையே பதிவாகி இருக்கிறது. கேரளாவில் 47% பருவமழை பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் தமிழ்நாட்டில் இயல்பை விட 9% மழை குறைவாக பெய்துள்ளதாக வானிலை மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
பூமியில் நேரடியாக சூரிய கதிர்கள் விழுவதால் வெப்பம் இயல்பை விட அதிகரித்துள்ளதாகவும், இதனால் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் தென் மேற்கு பருவமழை வலுவிழந்து இயல்பை விட குறைவாக மழை பதிவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், அடுத்து வரும் 2, 3 தினங்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்தார்.