என்னை பற்றிய அவதூறுகளை பற்றி நான் ஒரு போதும் கவலைப்பட்டதில்லை என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் சென்னை மாவட்ட திருக்கோயில்கள் சார்பில் 32 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. இந்த விழாவில் கலந்து கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின் திருமணங்களை நடத்தி வைத்து உரையாற்றினார். அப்போது பேசிய அவர் “ அறநிலையத்துறை நிகழ்ச்சிகளில் நான் அதிகமாக பங்கேற்கிறேன். 997 திருக்கோயில்களுக்கு சொந்தமான 7420 கோடி மதிப்பிலான நிலங்களை மீட்டிருக்கிறோம்.. 6000 கோடி மதிப்பிலான திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. 1000 ஆண்டுகள் பழமையான திருக்கோயில்களை தொன்மை மாறாமல் பரிமாரிக்கும் வகையில் 425 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது..
கிராமப்புறங்களில் இருக்கும் 5000 கோயில்கள், ஆதி திராவிடர் மக்கள் வசிக்கும் இடங்களில் 5000 கோயில்களின் திருப்பணிகளுக்கு நிதியுதவி அளித்திருக்கிறோம்.. ஆடி மாதத்தில் அம்மன் கோயில்களுக்கும், புரட்டாசி மாதத்தில் வைணவ திருத்தலங்களுக்கும், அறுபடை வீடுகளுக்கும், காசி, ராமேஸ்வரத்திற்கும் 60 வயது 70 வயது வரை உள்ள மூத்த குடிமக்களை கட்டணம் இல்லாமல் ஆன்மீக பயணத்திற்கு அழைத்து சென்றுள்ளோம்..
அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற வரலாற்று சிறப்புமிக்க திட்டத்தை செயல்படுத்தி, இதுவரை பயிற்சி பெற்ற 29 அர்ச்சகர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது. அன்னை தமிழில் வழிபாடு திட்டம் 295 கோயில்களில் செயல்படுத்தப்பட்டுள்ளது..
இந்த வரிசையில் இதுவரை 1100 திருமணங்களை கட்டணம் இல்லாமல் சீர் வரிசை பொருட்களை வழங்கி நடத்தி வைத்துள்ளோம்.. இப்படி நாள் முழுக்க சொல்லும் வகையில் சாதனைகளை செய்துள்ளோம்.. எல்லாருக்கும் எல்லாம் என்ற பரந்த உள்ளத்தோடு நமது திராவிட மாடலின் இந்த சாதனைகளை வெறுப்பையும் சமூகத்தை பிளவுபடுத்தும் எண்ணங்களை கொண்டவர்களால் இதை பார்த்து சகித்துக் கொள்ள முடியவில்லை.. பக்தியின் பேரில் பகல் வேஷம் போடுபவர்களால் இதை தாங்கிக்கொள்ள முடியவில்லை.
ஆனால் உண்மையான பக்தர்கள் நமது ஆட்சியின் ஆன்மீக தொண்டை பாராட்டுகின்றனர்.. நேற்று ஒரு வார பத்திரிகையில் “ நான் காவடி எடுப்பது மாதிரியும், அமைச்சர்கள் எல்லாம் அலகு குத்திக் கொண்டு, தரையில் உருளும் மாதிரியும் கார்ட்டூன் போட்டுள்ளார்கள்.. அதை பார்க்கும் எனக்கு சிரிப்பு வரவில்லை.. பரிதாபமாக இருந்தது. பல ஆண்டு கால வன்மம் அது.. அது வன்மத்தின் வழிபாடு தான் இந்த கார்ட்டூன்..
இந்த அவதூறுகளை பற்றி நான் ஒரு போதும் கவலைப்பட்டதில்லை.. இதெல்லாம் எனக்கு ஊக்கம், எனக்கு உற்சாகம் தான்.. இன்னும் எங்களை கேலி செய்யுங்கள், கிண்டல் செய்யுங்கள், கொச்சைப்படுத்துங்கள்.. எங்களுக்கு அதை பற்றி கவலை இல்லை.. என் கடன் பணி செய்து கிடப்பதே.. தொடர்ந்து உண்மையான பக்தர்களின் நலனுக்காக செயல்படுவோம்..” என்று தெரிவித்தார்.
Read More : உயிரிழந்த அஜித்குமாரின் தம்பிக்கு அரசுப்பணி நியமன ஆணையை வழங்கினார் அமைச்சர் பெரிய கருப்பன்..!