பாமக எம்.எல்.ஏ அருளை நீக்க அன்புமணிக்கு அதிகாரம் இல்லை என்று ராமதாஸ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது பேசிய அவர் “ பாமக எம்.எல்.ஏ அருளை நீக்க அன்புமணிக்கு அதிகாரம் இல்லை. பாமக கொறடாவாக அருள் தொடர்வார்.. ஜி.கே மணி மூலம் சபாநாயகருக்கு கடிதம் கொடுத்து தான் கொறடா அருளை நீக்க முடியும்.. நிர்வாகிகளை நீக்கும் அதிகாரம் எனக்கு மட்டுமே உள்ளது. ஒற்றை மனிதனாக 96,000 கிராமங்களுக்கு சென்று பாமக கட்சியை வளர்த்தேன். இதுபோன்று மன வேதனையான சில செயல்கள் வரத்தான் செய்கின்றன. ஆனால் அதை எல்லாம் புறம்தள்ளி விட்டு, நான் தொடர்ந்து கட்சியை வழிநடத்துவேன்..
தொடர்ந்து திமுக கூட்டணியில் புதிய கட்சி வரும் என்று முதலமைச்சர் கூறியிருந்த நிலையில் அந்த கட்சி பாமகவா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ராமதாஸ் “ பாமக எந்த கட்சியோடு, எந்த அணியோடு சேரும் என்பதை கட்சியின் நிர்வாக குழு, செயற்குழு, பொதுக்குழு கூடி முடிவு செய்யும். அதன்பின்னரே எந்த கட்சியுடன் கூட்டணி என்று சொல்ல முடியும். அதற்கு பாமக திமுக கூட்டணியில் இணையப் போகிறது என்பதெல்லாம் வதந்தி..” என்று தெரிவித்தார்.
முன்னதாக நேற்று பாமக எம்.எல்.ஏ அருளை கட்சியில் இருந்து நீக்குவதாக செயல் தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்திருந்தார். மேலும் அவர் வெளியிட்டிருந்த அறிக்கையில் “ கட்சியின் கட்டுப்பாட்டை மீறும் வகையிலும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். அண்மைக்காலங்களில் கட்சித் தலைமை குறித்து செய்தித் தொலைக்காட்சிகள் உள்ளிட்ட முதன்மை ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் அவதூறான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்.
கட்சியின் கட்டுப்பாட்டை மீறும் வகையிலான நடவடிக்கைகளுக்காக கட்சித் தலைமையிடம் 12 மணி நேரத்திற்குள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று திரு. இரா. அருள் அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. ஆனால், அதை அவர் மதிக்கவில்லை. பாட்டாளி மக்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் 02.07.2025 முதல் திரு. இரா. அருள் அவர்கள் நீக்கப்படுகிறார். பாட்டாளி மக்கள் கட்சியினர் எவரும் அவருடன் எந்த வகையிலும் தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” என்று தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து பேசிய எம்எல்ஏ அருள், “என்னை நீக்க அன்புமணிக்கு அதிகாரம் இல்லை, அத்தகைய முடிவை எடுக்க இயலும் ஒரே நபர் பாமக நிறுவனர் ராமதாஸ் தான்.” என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.