முதலமைச்சர் புதிது புதிதாக கவிதை எழுதினாலும் மக்கள் ஏமாறமாட்டார்கள் என்ற தமிழிசை சௌந்தரராஜனின் விமர்சனத்திற்கு அமைச்சர் சேகர் பாபு பதிலளித்துள்ளார்.
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது பேசிய அவர் “ இனம், மொழி, மானம் காக்க, ஓரணியில் தமிழ்நாடு என்ற முதலமைச்சரின் அறைகூவலை ஏற்று, மக்களோடு ஒன்றாக பிண்ணி பிணைந்து களமாடி கொண்டிருக்கிற கழக தொண்டர்கள் முதல் அமைச்சர்கள் வரை இந்த ஓரணியில் தமிழ்நாடு கழக உறுப்பினர் பதிவு நிகழ்ச்சியில் பங்கேற்று வருகின்றனர்.. 45 நாட்கள் இந்த உறுப்பினர் சேர்க்கை தொடர்ந்து நடைபெறும்.. இன்று வில்லிவாக்கத்தில் உள்ள நான்கைந்து வீடுகளுக்கு சென்றோம்.. இந்த உறுப்பினர் பதவை பெற அங்கு சென்றோம்.. எங்களை மகிழ்ச்சியோடு வரவேற்று, உட்கார வைத்து சாப்பிட என்ன வேண்டும் என்று உபசரித்து திமுகவில் உறுப்பினராக சேர்ந்ததது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த மகிழ்ச்சி வாக்குகளாக மாறி, 2026 சட்டமன்ற தேர்தலில் 2-வது முறையாக தளபதி முதலமைச்சர் அரியணையில் என்ற நம்பிக்கை எங்களுக்கு பிறக்கிறது” என்று தெரிவித்தார்.
அப்போது செய்தியாளர் ஒருவர் “ முதலமைச்சர் புதிது புதிதாக கவிதை எழுதினாலும் மக்கள் ஏமாறமாட்டார்கள் என்று தமிழிசை சௌந்தரராஜன் கூறியது குறித்து கேள்வி எழுப்பினர்.. அதற்கு பதிலளித்த அமைச்சர் “ தமிழிசையின் கவிதையில் ஏமாறாததால் தான், அவர் எந்தெந்த தேர்தல்களை சந்திக்கிறாரோ, அத்தனை தேர்தல்களிலும் மக்கள் அவருக்கு தோல்வியையே பரிசாக தருகின்றனர்.. நான் ஒரு புதிய கவிதையை அவர்களுக்கு உரித்தாக்குகிறேன்.. தோல்வியின் முகமே.. தமிழிசையே.. எங்கள் அக்காவே.. வருக..” என்று கூறினார்.
ஓரணில் தமிழ்நாடு என்ற பிரச்சாரத்தை தமிழிசை எதிரணியில் தமிழ்நாடு என்று கூறியது குறித்தும் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த சேகர் பாபு “ ஏதாவது ஒன்று பேச வேண்டும்.. தன்னை தக்க வைத்துக் கொள்ள வேண்டும்.. பாஜகவில் நாற்காலி போட்டி கடுமையாக இருக்கிறார்.. பாஜகவின் செல்வாக்கு பெற்ற தலைவர் யார்? அண்ணாமலையா, நயினார் நாகேந்திரனா? என்ற போட்டி நிலவுகிறது.. மறுபுறம் அக்கா தமிழிசை நான் செல்வாக்கு பெற்ற தலைவர் என்று காட்டிக்கொள்ள, யோசித்து இதுபோன்று ஒரு செய்தியை தந்து கொண்டிருக்கிறார். தமிழிசையின் கருத்துகளை நாம் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை..” என்று தெரிவித்தார்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்திருப்பதாக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியின் கருத்து குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர் “ சட்டம் ஒழுங்கு சரியாக இருப்பதால் தான், அவர் தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார். சட்டம் ஒழுங்கு சரியாக இருப்பதால் அவர் வாய்க்கு வந்ததை எல்லாம் உளறிக் கொட்டிக் கொண்டு இருக்கிறார்.. சட்டம் ஒழுங்கு சரியாக இருப்பதால் நீங்கள் கேள்வி கேட்கிறீர்கள்.. நான் பதில் சொல்கிறேன்.. இங்கு நடைபெறுவது ஜனநாயகத்தின் ஆட்சி.. சட்டத்தின் ஆட்சி.. இது சாத்தானின் ஆட்சி அல்ல” என்று தெரிவித்தார்.
Read More : இது பெருத்த அவமானம்.. முதலமைச்சர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. ஆதவ் அர்ஜுனா அட்டாக்..