டெக்சாஸ் மாகாணாத்தில் நேற்று ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் 24 பேர் இறந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அமெரிக்காவின் டெக்சாஸில் நேற்று வரலாறு காணாத கனமழை பெய்தது.. சில மணிநேரங்களில் கனமழை கொட்டித்தீர்த்ததால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.. இதில் சுமார் 24 பேர் உயிரிழந்தனர்.. கோடைக்கால முகாமில் கலந்து கொண்ட 23-க்கும் மேற்பட்ட பெண்களை காணவில்லை..
கெர் கவுண்டி பகுதியில் இரவு முழுவதும் 25 செ.மீ மழை பெய்ததால் குவாடலூப் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் நடந்து வருகின்றன.
தேடுதல் பணி தொடர்ந்து வருவதால் திடீர் வெள்ளத்தால் ஏற்பட்ட இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.. இந்த வெள்ளத்தில் 24 பேர் இறந்ததை ஆளுநர் கிரெக் அபோட் உறுதிப்படுத்தினார். இறந்த உடல்களை அடையாளம் காண பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
மீட்புப் பணியில் குறைந்தது 400 பேர் இருப்பதாக லெப்டினன்ட் கவர்னர் டான் பேட்ரிக் கூறினார். தேடுதல் பணியில் 9 மீட்புக் குழுக்கள், 14 ஹெலிகாப்டர்கள் மற்றும் 12 ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன, மேலும் சிலர் மரங்களிலிருந்து மீட்கப்படுவதாக பேட்ரிக் கூறினார்.
லெப்டினன்ட் கவர்னர் டான் பேட்ரிக் பேசிய போது “ டெக்சாஸ் ஹில் கன்ட்ரியில் உள்ள முகாமில் கலந்து கொண்ட சுமார் 750 பெண்களில் சுமார் 23 பேர் காணாமல் போனவர்களில் அடங்குவர். காணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்க தேடுதல் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது..” என்று கூறினார்.
ஹன்ட்டில் உள்ள குவாடலூப் நீர்மட்டம் சுமார் இரண்டு மணி நேரத்தில் 22 அடி உயரத்தை (6.7 மீட்டர்) பதிவு செய்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடும் வெள்ளத்தால் டெக்சாஸில் நடைபெற இருந்த அணிவகுப்பு, இசை நிகழ்ச்சி மற்றும் வாணவேடிக்கை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது..
இதனிடையே மத்திய நியூ ஜெர்சி மாகாணத்தில் இடியுடன் கூடிய மழை பெய்தது.. இதில் 3 பேர் உயிரிழந்தனர். அவர்களில் ப்ளைன்ஃபீல்டில் இரண்டு பேர் தங்கள் வாகனத்தின் மீது மரம் விழுந்ததில் இறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More : இன்றுதான் ஜூலை 5!. பாபா வங்கா சொன்ன மாதிரியே நடந்துருச்சு!. நிலத்தடியில் அதிர்வை கண்டுபிடித்த விஞ்ஞானிகள்!