வானிலை மையம் (NOAA) மற்றும் தேசிய வானிலை சேவை துறையில், பணியாளர் குறைபாடு காரணமாக டெக்சாஸ் வெள்ளத்திற்கான எச்சரிக்கை சரியாக அளிக்கப்படவில்லை என விமர்சனங்கள் எழுந்துள்ளன
அமெரிக்காவின் டெக்சாஸின் தெற்கு மற்றும் மத்திய பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே இடி-மின்னலுடன் கூடிய தொடர் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நகரின் பல பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளன. குறிப்பாக குவாடாலூப் ஆறு கரை புரண்டதில், வெள்ளம் நகரின் உள்ளே புகுந்தது. மக்கள் மரங்களில் ஏறி உயிர் காக்க போராடியுள்ளனர்.
இதனையடுத்து ஹெலிகாப்டர்கள், படகுகள் மற்றும் டிரோன்கள் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி, மரங்களில் சிக்கி நிற்பவர்கள், முகாம்களில் பரிதவித்து நிற்பவர்கள் மற்றும் காணாமல் போனவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் பெய்த கடும் பருவமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 67 ஆக உயர்ந்துள்ளது.
இதற்கிடையே டெக்சாஸில் கோடைகால முகாமுக்கு சென்றிருந்த 700 மாணவிகளின், இருபதுக்கும் மேற்பட்ட மாணவிகள் மாயமாகியுள்ளனர். டெக்சாஸ் வெள்ளம் இதுவரை கண்டிராத பேரழிவு என அப்பகுதி மக்கள் வேதனையுடன் கூறுகின்றனர். வெள்ளத்தால் பெரும் பாதிப்பை சந்தித்துள்ள கேர் கவுண்டி பகுதியில் மட்டும் 59 பேர் உயிரிழந்துள்ளனர் என மாவட்ட ஷெரிப் லாரி லெய்தா தெரிவித்துள்ளார். அந்த எண்ணிக்கையில் 21 குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேசிய பேரிடர் முகமை (FEMA) மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறது. இதற்கிடையே, வானிலை மையம் (NOAA) மற்றும் தேசிய வானிலை சேவை துறை எச்சரிக்கை சரியாக அளிக்கப்படவில்லை என குற்றசாட்டுகள் முன்வைக்கப்பட்டது. இதற்கு பதிலளித்த முன்னாள் NOAA இயக்குநர் ரிக் ஸ்பின்ராட், “வானிலை சேவையில் பணியாளர் குறைவால் முன்னெச்சரிக்கை தகவல் தொடர்பு பாதிக்கப்பட்டிருக்க வாய்ப்பு இருக்கிறது,” என தெரிவித்துள்ளார்.
மீட்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் டெக்சாஸுக்கு செல்ல திட்டமிட்டுள்ளார்.. இதை பயங்கரமான கோர வெள்ளம் என்று அழைத்த டிரம்ப், கெர் கவுண்டிக்கான ஒரு பெரிய பேரிடர் அறிவிப்பிலும் கையெழுத்திட்டார். இந்த நடவடிக்கை, பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவத் தொடங்க மத்திய அவசரநிலை மேலாண்மை நிறுவனம் (FEMA) ஐ அனுமதிக்கிறது.