தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பள்ளி, கல்லூரிகளில் மாணவ, மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தரும் சம்பவங்கள் அதிகரித்து வருவது பெற்றோர்களை கவலை கொள்ள செய்துள்ளது. குறிப்பாக பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களை மாணவிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்துவதால் பெற்றோர்கள் கடும் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
பாலியல் வழக்குகளில் சிக்கும் ஆசிரியர்கள் மீது சட்டரீதியாக மட்டும் அல்லாது துறை ரீதியாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதை அடுத்து பேசிய தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பாலியல் வழக்கில் சிக்கும் ஆசிரியர்கள் மீது சட்ட நடவடிக்கையோடு அவர்களின் கல்வி சான்றிதழ்கள் ரத்து செய்யப்படும் எனக் கூறியிருந்தார்.
இருப்பினும் மாணவிகளிடம் சில்மிஷம் செய்யும் ஆசிரியர்களின் எண்ணிக்கை குறைந்த பாடில்லை. கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட நீலகிரி மாவட்டத்தில் பள்ளி ஆசிரியர் ஒருவர் 21 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் ஓசுர் அருகே 5 ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 5-ம் வகுப்பில் படிக்கும் 10 வயதுடைய சிறுமி, பள்ளி முடிந்த பிறகு வீடு திரும்பியபோது சோகமாக இருந்துள்ளார். மறுநாள் பள்ளிக்கு செல்ல மறுத்த அந்த சிறுமி, தாயாரிடம் நடந்ததைக் கூறிய போது, பள்ளி தலைமை ஆசிரியர் சாரதி, தன்னை தனியாக அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அங்கிருந்து தப்பிக்க முயன்ற போது மூக்கில் தாக்கியதில் ரத்தம் வந்ததாகவும் தெரிவித்தார்.
அதிர்ச்சியடைந்த மாணவியின் தாயார், தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். மாணவியின் வாக்குமூலம் மற்றும் பெற்றோரின் புகாரின்பேரில், தலைமையாசிரியர் சாரதி மீது போலீசார் போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, கைது செய்தனர். இந்த சம்பவம், பெற்றோர் மற்றும் பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Read more: குட்நியூஸ்.. இன்று சரசரவென குறைந்த தங்கம் விலை.. எவ்வளவுன்னு பாருங்க..