பாகிஸ்தான் ராணுவத்தின் நம்பகமான முகவராக தான் இருந்ததாக NIA விசாரணையில் 26/11 குற்றவாளி தஹாவூர் ராணா தெரிவித்துள்ளார்.
26/11 தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட தஹாவூர் ராணா, சில அதிர்ச்சியூட்டும் தகவல்களை தெரிவித்துள்ளார்.. பாகிஸ்தான் ராணுவத்தின் நம்பகமான முகவராகவும், 2008 தாக்குதல்களின் போது மும்பையில் இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்..
ஏப்ரல் 4 ஆம் தேதி அமெரிக்க உச்ச நீதிமன்றம் நாடுகடத்தலுக்கு எதிரான மறுஆய்வு மனுவை நிராகரித்ததை அடுத்து, ஏப்ரல் 10 ஆம் தேதி ராணா அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார். 26/11 பயங்கரவாத தாக்குதல் வழக்கில் அவரிடம் தற்போது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது..
தேசிய புலனாய்வு அமைப்பின் (NIA) காவலில் இருந்தபோது, மும்பை காவல்துறை குற்றப்பிரிவு ராணாவின் வாக்குமூலத்தைப் பதிவு செய்தது. அப்போது, அவர் பாகிஸ்தான் ராணுவத்தின் நம்பகமான முகவராக இருந்ததாக கூறியுள்ளார். மேலும் சில அதிர்ச்சி தகவல்களையும் அவர் தெரிவித்துள்ளார்.
வளைகுடாப் போரின் போது தான் சவுதி அரேபியாவிற்கு அனுப்பப்பட்டதாகவும், லஷ்கர்-இ-தொய்பா (LeT) முதலில் ஒரு உளவு வலையமைப்பாக உருவாக்கப்பட்டது என்றும் ராணா கூறினார். தனது கூட்டாளியான டேவிட் ஹெட்லி தடைசெய்யப்பட்ட LeT குழுவுடன் பல பயங்கரவாத பயிற்சி அமர்வுகளை நடத்தியதாகவும் ராணா கூறி உள்ளார்.
2008 தாக்குதல்களுக்கு முன்னதாக மும்பையில் பல பகுதிகளில் உளவு பார்த்ததாகவும், லஷ்கர் தொடர்பான பயங்கரவாதிகள் தாஜ் ஹோட்டலைத் தாக்கியபோது அந்தப் பகுதியில் இருந்ததாகவும் ராணா கூறினார்.
லஷ்கர்-இ-தொய்பா (LeT) இயக்கத்தைச் சேர்ந்த டேவிட் ஹெட்லியுடன் சேர்ந்து ராணா தாக்குதல் நடத்த சதி செய்ததாக NIA மீது குற்றம் சாட்டியுள்ளது. இவர் லஷ்கர்-இ-தொய்பா (LeT) தலைவர் ஹபீஸ் சயீத்தின் அறிவுறுத்தலின் பேரில் மும்பை தாக்குதல்களுக்கான இலக்குகளைத் திட்டமிடவும் கணக்கெடுக்கவும் உதவியவர்.
தாக்குதல்களைத் திட்டமிடுவதில் ராணா ஈடுபட்டதாகவும், இந்தியாவுக்குச் செல்ல தவறான அடையாளத்தை உருவாக்கி விசா பெற ஹெட்லிக்கு உதவியதாகவும் கூறப்படுகிறது.
மும்பையின் தெருக்களிலும், தாஜ் ஹோட்டலிலும் நடந்த கொடூரமான ரத்தக்களரியில் குறைந்தது 166 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Read More : ஹிமாச்சலில் மீண்டும் மேக வெடிப்பு.. கொட்டி தீர்க்கும் கனமழை.. வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட இளம்பெண்..