கோண்டா தொகுதியில் நான்கு முறை எம்.பி.யாகவும், வெளியுறவுத் துறை இணையமைச்சர் கீர்த்தி வர்தன் சிங்கின் தந்தையுமான குன்வர் ஆனந்த் சிங், லக்னோவில் தனது 87வது வயதில் காலமானார். நேற்று இரவு அவரது உடல்நிலை மோசமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட முக்கிய அரசியல் பிரமுகர்கள் சிங்கின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். ஜனவரி 4, 1939 இல் பிறந்த குன்வர் ஆனந்த் சிங், அரச குடும்பத்தைச் சேர்ந்தவர். அவர் லக்னோவில் உள்ள கோல்வின் தாலுகேதர் கல்லூரியில் பள்ளிப் படிப்பை முடித்தார், அலகாபாத்தில் உள்ள வேளாண் நிறுவனத்தில் வேளாண்மையில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.
தனது தந்தையின் மறைவுக்குப் பிறகு, அரசியலில் நுழைந்த குன்வர் ஆனந்த் சிங் 1964, 1967 மற்றும் 1969 ஆம் ஆண்டுகளில் உத்தரபிரதேச சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் ஆலோசனையின் பேரில், அவர் இந்திய தேசிய காங்கிரஸில் சேர்ந்தார். 1971 ஆம் ஆண்டு கோண்டா தொகுதியிலிருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்,
மீண்டும் 1980, 1984 மற்றும் 1989 ஆம் ஆண்டுகளில் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2012 உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் கவுரா தொகுதியில் வெற்றி பெற்றார். அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பு அகிலேஷ் யாதவ் தலைமையிலான அரசாங்கத்தில் வேளாண் அமைச்சராகப் பணியாற்றினார். “உத்தரப்பிரதேச புலி” என்று குறிப்பிடப்படும் சிங், கிழக்கு உத்தரபிரதேசத்தில் மகத்தான செல்வாக்கைக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.