ரிஷப் ஷெட்டியின் பிறந்த நாளை முன்னிட்டு, காந்தாரா சேப்டர் 1 படத்தின் புதிய போஸ்டர் வெளியாகி உள்ளது..
2022-ம் ஆண்டு கன்னடத்தில் வெளியான காந்தாரா படம் பான் இந்தியா வெற்றி படமாக அமைந்தது. ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த இந்த படம் கன்னட திரையுலகின் மிகப்பெரிய வெற்றிப் படமாகும். இப்படத்தில் சப்தமி கவுடா, அச்யுத் குமார், கிஷோர் குமார் ஜி, பிரகாஷ் துமிநாட் மற்றும் மானசி சுதிர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பூத கோலா என்ற சிறு தெய்வ வழிபாடு குறித்தும், மனிதர்களுக்கும் காடுகளுக்கும் இடையே இருக்கும் தொடர்பு குறித்து பேசிய படம் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது. வெறும் ரூ.14 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் உலகளவில் ரூ.450 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது.
இந்த படத்திற்கு கிடைத்த மாபெரும் வரவேற்பை தொடர்ந்து காந்தாரா சேப்டர் 1 என்ற பெயரில் ரிஷப் ஷெட்டி இயக்கி வருகிறார். காந்தார படத்தின் ப்ரீகுவலாக அதாவது முன் கதையாக இந்த படம் உருவாகி வருகிறது. பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகும் இந்த படம் இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக உள்ளது. இந்த படம் வரும் அக்டோபர் மாதம் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் காந்தாரா படத்தின் புதிய போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்… ரிஷப் ஷெட்டியின் 41 வது பிறந்தநாளை முன்னிட்டு, காந்தாரா: சேப்டர் 1 இன் வெளியீட்டு தேதி இன்று மீண்டும் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.