நடிகர், இயக்குநர் சந்தானபாரதியின் சகோதரரும், பிரபல நகைச்சுவை நடிகருமான ஆர்.எஸ். சிவாஜி உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 66.
சென்னை வளசரவாக்கத்தில் வசித்து வந்த ஆர்.எஸ்.சிவாஜி, உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். விக்ரம், மைக்கேல் மதன காம ராஜன், மை டியர் மார்த்தாண்டன், குணா உள்ளிட்ட பல படங்களில் இவர் நடித்துள்ளார். குறிப்பாக, அபூர்வ சகோதரர்கள் படத்தில் ”நீங்க எங்கேயோ போய்ட்டீங்க சார்” என இவர் பேசிய வசனம் மிகவும் பிரபலம். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான கார்கி படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றதுடன் அவரது நடிப்புக்கும் பாராட்டுக்கள் குவிந்தன.
இந்நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக ஆர்.எஸ்.சிவாஜி இன்று காலமானார். நடிகர் ஆர்.எஸ்.சிவாஜி பழம்பெரும் தயாரிப்பாளர் எம்.ஆர். சந்தானத்தின் மகன் ஆவார். மேலும், இயக்குநரும் நடிகருமான சந்தான பாரதியின் சகோதரர். கமல்ஹாசனின் நண்பராக அறியப்படும் இவர், அவருடன் இணைந்து பல படங்களில் இணைந்து நடித்துள்ளார்.
மேலும், நடிகர் கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் நிர்வாக தயாரிப்பாளராக ஆர்.எஸ்.சிவாஜி பல ஆண்டுகளாக பணியாற்றியுள்ளார். தமிழ் திரைப்படத் துறையில் உதவி இயக்குநர், சவுண்ட் டிசைனர் என பல்வேறு துறைகளில் இயங்கி வந்திருக்கிறார். இந்நிலையில், அவரது மறைவுக்கு சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.