பெரம்பலூர் மாவட்டம் தேனூர் கோவில்பாளையம் கிராமத்தில் தேர் திருவிழாவின் போது அலங்கார பகுதி சாய்ந்து விழுந்து விபத்து நிகழ்ந்துள்ளது.
பெரம்பலூர் மாவட்டம் குன்னை அருகே தேனூர் கோவில்பாளையம் கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற செல்லையம்மாள் கோவில் உள்ளது. இங்கு காலம் காலமாக ஆணி மாதத்தில் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி கடந்த எட்டு நாட்களுக்கு முன்பு காப்பு கட்டி வெகு விமர்சையாக திருவிழா தொடங்கியது. திருவிழாவை முன்னிட்டு தினமும் அபிஷேகம் அலங்காரம் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தது.
திருவிழாவின் எட்டாம் நாளான இன்று தேர் திருவிழா நடைபெற இருந்தது. தேர் திருவிழாவை முன்னிட்டு இன்று காலை தேரை வடம்பிடித்து இழுத்தபோது தேரின் அச்சி முறிந்து, அலங்கார பகுதியான மேல் உள்ள கோபுர பகுதி கீழே விழுந்துள்ளது. இந்த விபத்தை கண்டதும் அங்கிருந்த மக்கள் அலறியடுத்து ஓடினர். இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக எந்த விதமான உயிர் சேதமும் ஏற்படவில்லை. பின்னர் சரிந்து விழுந்த தேரின் மேல் பகுதியை சரி செய்துவிட்டு, தேரை வடம் பிடித்து பக்தர்கள் இழுத்தனர்.