இன்று நாடு தழுவிய வேலைநிறுத்தம் நடைபெற உள்ள நிலையில், என்னென்ன இயங்கும்? என்னென்ன இயங்காது? என்பது குறித்து பார்க்கலாம்..
ஜூலை 9, அதாவது இன்று நாடு தழுவிய வேலைநிறுத்தம் நடைபெற உள்ளது. 10 மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டு அமைப்பால் அழைப்பு விடுக்கப்பட்ட இந்த பாரத் பந்தில் 25 கோடிக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்க உள்ளனர். இந்த வேலைநிறுத்தம் வங்கி, காப்பீடு, போக்குவரத்து, மின்சாரம் மற்றும் அஞ்சல் நடவடிக்கைகள் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளை பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் விவசாய குழுக்கள் மற்றும் கிராமப்புற தொழிலாளர் சங்கங்களின் கூடுதல் ஆதரவும் இதில் அடங்கும்.
வேலைநிறுத்தத்திற்கு என்ன காரணம்?
மத்திய அரசின் தொழிலாளர் விரோத, விவசாயி விரோத மற்றும் பெருநிறுவன சார்பு கொள்கைகளுக்கு எதிரான போராட்டம் இந்த வேலைநிறுத்தம் என்று கூட்டு தொழிற்சங்க மன்றம் தெரிவித்துள்ளது. 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலைநிறுத்தம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது..
முக்கிய கோரிக்கைகள் என்னென்ன?
நான்கு புதிய தொழிலாளர் குறியீடுகளை திணித்தல்
பொதுத்துறை அலகுகள் மற்றும் அத்தியாவசிய சேவைகளை தனியார்மயமாக்குதல்
நிரந்தர வேலைகளை அவுட்சோர்சிங் செய்தல் மற்றும் ஒப்பந்தமயமாக்குதல்
கூட்டு பேரம் பேசும் உரிமைகள் மற்றும் தொழிற்சங்க நடவடிக்கைகளை பலவீனப்படுத்துதல்
கடந்த பத்தாண்டுகளாக வருடாந்திர தொழிலாளர் மாநாடு எதுவும் நடத்தப்படவில்லை
தொழிற்சங்கங்கள் ஏற்கனவே மத்திய தொழிலாளர் அமைச்சகத்திடம் 17 அம்ச கோரிக்கைகளை சமர்ப்பித்திருந்தன, ஆனால் அர்த்தமுள்ள பேச்சுவார்த்தை எதுவும் நடக்கவில்லை என்று கூறுகின்றன.
யார் பங்கேற்கிறார்கள்?
AITUC – அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸ், INTUC – இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரஸ், CITU – இந்திய தொழிற்சங்க மையம், HMS – ஹிந்த் மஸ்தூர் சபா உள்ளிட்ட முக்கிய தொழிற்சங்கங்களின் தலைவர்கள் பங்கேற்பதை உறுதிப்படுத்தியுள்ளனர். AITUC இன் அமர்ஜீத் கவுர் கூறுகையில், கட்டுமானம், சுரங்கம், போக்குவரத்து, உற்பத்தி, வங்கி, காப்பீடு மற்றும் விவசாயம் உள்ளிட்ட 25 கோடிக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இதில் சேர உள்ளனர். குறிப்பாக:
வங்கி மற்றும் காப்பீட்டு ஊழியர்கள் நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவார்கள்
பல மாநிலங்களில் தபால் ஊழியர்கள் மற்றும் பொது போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடலாம்..
அதிகாரப்பூர்வ அரசு விடுமுறை அறிவிக்கப்படவில்லை என்றாலும், நாட்டின் பல பகுதிகளில் முக்கிய சேவைகள் பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
என்னென்ன சேவைகள் பாதிக்கப்படும் ?
பொதுத்துறை மற்றும் கூட்டுறவு வங்கிகள் சேவைகள் பாதிக்கப்படும்
காப்பீட்டு சேவைகள் (LIC, GIC, தனியார் துறை ஊழியர்களின் பங்கேற்பு மாறுபடும்)
தபால் விநியோகங்கள் பாதிக்கப்படும்
சில மாநிலங்களில் மின்சாரம் விநியோகம் பாதிக்கப்படலாம்
பொது போக்குவரத்து, குறிப்பாக வலுவான தொழிற்சங்க இருப்பு உள்ள மாநிலங்களில்
தொழிற்சங்கமயமாக்கப்பட்ட துறைகளில் நிலக்கரி சுரங்கம் மற்றும் தொழில்துறை உற்பத்தி பாதிக்கப்படும்
எதெல்லாம் திறந்திருக்கும்?
பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும்.. ஏனெனில் மாநில அரசுகளால் இன்னும் மூடல் உத்தரவுகள் பிறப்பிக்கப்படவில்லை.
தனியார் அலுவலகங்கள் மற்றும் அவசர சேவைகள் வழக்கம் போல் செயல்படும். எனினும் போக்குவரத்து இடையூறுகள் தாமதங்கள் ஏற்படலாம்..
அத்தியாவசிய சுகாதார சேவை வழக்கம் போல் கிடைக்கும். எனினும் சில துணை ஊழியர்கள் சில பகுதிகளில் போராட்டத்தில் சேரலாம்..
பாதுகாப்பு ஏற்பாடுகள்
மாநில அரசுகளும் உள்ளூர் நிர்வாகங்களும் எச்சரிக்கையுடன் உள்ளன. மேலும் சட்டம் ஒழுங்கை உறுதி செய்ய கூடுதல் போலீஸ் படைகளை அனுப்பக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பந்த் குறித்து மத்திய அரசு ஒரு முறையான அறிக்கையை வெளியிடவில்லை, ஆனால் இதுதொடர்பாக உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகக் கூறப்படுகிறது.
இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும் முக்கிய மாநில சட்டமன்றத் தேர்தல்களுக்கு முன்னதாக இந்த பாரத் பந்த் நடைபெற உள்ளது.. தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் மத்தியில் நிலவும் ஆழ்ந்த அதிருப்தியை இது பிரதிபலிக்கிறது.