தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் சூழ்நிலையில், அனைத்து கட்சிகளும் தங்களது அரசியல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன. அந்த வரிசையில், விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் தனியார் மண்டபத்தில் நெல்லை மண்டல மதிமுக ஆலோசனை கூட்டம் நடந்தது.
அரங்கம் நிரம்பிய நிலையில், கட்சி பொதுச்செயலாளர் வைகோ தன்னைச் சுற்றிய அரசியல் அனுபவங்களும், தமிழ் இலக்கியங்களும் கலந்து நீண்ட உரையாற்றினார். ஆனால் அவரது உரையை முழுமையாகக் கேட்க தொண்டர்களுக்கு பொறுமை இல்லை. அதனால், அரங்கில் இருந்த கட்சி தொண்டர்கள் கூட்டக்கூட்டமாக வெளியேறத் தொடங்கினர். ஒரு கட்டத்தில் அரங்கின் பாதிக்குமேல் இருக்கைகள் காலியாகக் காணப்பட்டன. இது வைகோவுக்கு அதிருப்தியாக அமைந்தது.
அந்தக் காலியான இருக்கைகளை படம் பிடித்த செய்தியாளர்களை பார்த்தவுடன், வைகோ கடுமையான ஆவேசத்திற்கு ஆளாகினார். “செய்தியாளர்களைப் ‘பயல்களா’ என திட்டினார். அவர்களை வெளியேற்றவும், கேமரா பிலிம் ரோல்களை உருவும்படி நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டார்” எனத் தெரிகிறது.
வைகோவின் இந்த வார்த்தைகளைத் தொடர்ந்து, மதிமுக தொண்டர்கள் செய்தியாளர்களிடம் கேமரா பிடுங்க முயற்சி செய்தனர், இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சில செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடந்ததுடன், சிலர் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
“வைகோவின் தூண்டுதலால் தாக்குதல் நடத்தப்பட்டது” என போலீசில் தனிப்பட்ட புகார் அளித்துள்ளனர். இதனிடையே, பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் வைகோவுக்கு கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளனர்.
Read more: இந்திய ரயில்வேயில் 50000 வேலைவாய்ப்புகள்.. மத்திய அரசு சொன்ன குட்நியூஸ்..