டென்னிஸ் வீராங்கனை ராதிகா யாதவ் (25) தனது சொந்த தந்தையால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர் 25 வயதான ராதிகா யாதவ். மாநில அளவிலான டென்னிஸ் வீராங்கனையான இவர் குருகிராமின் செக்டார் 57 இன் சுஷாந்த் லோக்-கட்டம் 2 இல் உள்ள வீட்டில் ராதிகா தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் இன்று நண்பகல் 12 மணியளவில் ராதிகாவை அவரின் தந்தை சுட்டுக் கொன்றதாக கூறப்படுகிறது. குற்றம் சாட்டப்பட்ட தந்தை தனது மகளை 3 முறை துப்பாக்கியால் சுட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 25 வயதான அந்த பெண் ஆபத்தான நிலையில் ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு உடனடியாக சிகிச்சை தொடங்கப்பட்ட நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தந்தை தனது மகளை கொலை செய்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.. தனது மகள் தனக்கு பிடிக்காத ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே அவர் தனது மகளை சுட்டுக் கொன்றிருக்கலாம் என்று காவல்துறையினர் கூறியுள்ளனர்.
இதையடுத்து குற்றம் சாட்டப்பட்ட தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர், மேலும் இந்த செயலில் பயன்படுத்தப்பட்ட ரிவால்வர் வீட்டிலிருந்து மீட்கப்பட்டது. கைது செய்யப்பட்ட தந்தை தனது மகளை கொலை செய்ததற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ராதிகா யாதவ் மாநில அளவிலான டென்னிஸ் போட்டிகளில் மிகவும் பிரபலமானவர். அவர் பல பதக்கங்களை வென்றுள்ளார். டென்னிஸ் வீராங்கனையான அவர் ஒரு டென்னிஸ் அகாடமியை நடத்தி வந்தார். அவர் மற்ற வீரர்களுக்கு பயிற்சி அளித்தார்.
அவர் விஸ்வநாத் ஹர்ஷினி, பௌக்ரத் மேலிஸ், சன் யிஃபான், மருரி சுஹிதா மற்றும் மஷாபயேவா தில்னாஸ் ஆகியோருக்கு எதிரான போட்டிகள் உட்பட பல்வேறு போட்டிகளில் பங்கேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.