வரும் செப்டம்பரில் பிரதமர் நரேந்திர மோடி தனது 75வது வயதை நிறைவு செய்யவுள்ள நிலையில், ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) தலைவர் மோகன் பகவத், 75 வயதிற்குப் பிறகு தலைவர்கள் ஓய்வு பெற வேண்டும் என்று பேசிய கருத்து சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாக்பூரில் உள்ள ஆர்எஸ்எஸ் தலைமையகத்தில் நடைபெற்ற “குரு பூர்ணிமா” விழாவில் பேசிய மோகன் பகவத், வயதானவர்கள் வழிகாட்ட வேண்டும்; செயல்படவேண்டிய பொறுப்புகளை இளைஞர்கள் ஏற்க வேண்டும். இதுவே இயற்கை நெறி.” அதாவது, “நீங்கள் 75 வயதை அடைந்ததாக ஒருவர் வாழ்த்தும்போது, அதற்குப் பொருள் இனிமேல் நீங்கள் (செயலில்) இருந்து விலகி, மற்றவர்களுக்கு இடமளிக்க வேண்டும் என்றுதான் அர்த்தம் என்று அவர் பேசியுள்ளார்.
இதற்கு பதிலளித்த சிவசேனா (UBT)-யின் சஞ்சய் ராவத், “இது பிரதமர் மோடிக்கு ஒரு திடமான குறிப்பு தான். அவர் இவ்வருடம் செப்டம்பர் 17ம் தேதி 75 வயதை அடைகிறார். ஆகவே, ஓய்வு பெறவேண்டும் என்ற பகவத் கூறிய கருத்து பிரதமர் மோடியை நோக்கி நேரடியாகச் செல்கிறது என்று குறிப்பிட்டு பேசியுள்ளார். பிரதமர் மோடி மட்டுமல்லாமல், மோகன் பாகவத்தும் இந்த ஆண்டு செப்டம்பர் 11-ஆம் தேதி 75 வயதை அடைவார். அதாவது பிரதமர் நரேந்திர மோடியை விட சில நாட்கள் முன்னதாகவே பகவத் தனது பிறந்த நாளை கொண்டாடவுள்ளார். மோகன் பாகவத், 2009ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் தலைவராக (சர்சங்க்சாலக்) செயல்பட்டு வருகிறார்.
முன்னதாக, மோடி 75 வயதில் பதவி விலக வேண்டும் என்ற கருத்தை உள்துறை அமைச்சர் அமித் ஷா நிராகரித்திருந்தார். “பிரதமர் மோடிக்கு வயதின் எல்லை அமையும் என்று எங்கும் கூறவில்லை; அவர் நாடு முன்னேறும் வரை தொடருவார் என்று பேசியிருந்தார். ஆனால், நேற்று கூறியதாவது, “நான் ஓய்வு பெற்ற பின், என் வாழ்க்கையை வேதங்கள் மற்றும் உபநிஷத்துகளை ஆய்வு செய்யவே ஒதுக்க விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.
சமீப காலங்களில் ஆர்எஸ்எஸ் (RSS), சங்க பரிவாரத்தில் (Sangh Parivar) தனது தாக்கத்தையும் நிலைப்பாட்டையும் தீவிரமாக வெளிப்படுத்தி வருகிறது. இதனால், பிரதமர் நரேந்திர மோடி பதவியில் இருந்து விலகும் முடிவை எடுப்பதற்கான சாத்தியக்கூறு எழுந்தால், அவர் முடிவெடுக்கும் சூழ்நிலையில், அவருக்குப் பிறகு ஆட்சியை ஏற்கும் வாரிசை தேர்ந்தெடுக்கும் செயலில் RSS முக்கிய பங்கு வகிக்க விரும்பும் என்பது உறுதி என்று கூறப்படுகிறது.