சீமான் பனை ஏறி கள்ளு குடிக்க வலியுறுத்துவதும், மாடுகளை மேய்க்கச்சொல்லுவதும் சாதி வெறியின் எச்சம் என்று விசிகவின் வன்னி அரசு கடுமையாக விமர்சித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்றைய தினம் மதுரையில் ஆடு மாடுகளுக்கான மாநாட்டை நடத்தினார். அப்போது ஆடு மாடுகளை மேய்ப்பது அவமானம் அல்ல வெகுமானம் என்பதை உணராத வரை, நாட்டின் பொருளாதாரம் வளராது என்று ஆவசேமாக பேசினார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னியரசு, ஆரியக்கோட்பாடான குலக்கல்வித்திட்டத்தை ஊக்கப்படுத்தவே இந்த மாநாட்டை ஆர்எஸ்எஸ் பின்னணியில் சீமான் நடத்தியுள்ளார். மேலும் அவரின் இந்த பேச்சு “சாதி வெறியின் எச்சம்” என்றும் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது குறித்து எக்ஸ் வலைதள பதிவிட்டுள்ள வி.சி.க. துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு, “இன்று அழகு முத்துக்கோன் குருபூஜை விழா நடைபெறுகிறது. இதையொட்டி நேற்றே ஆடு மாடுகளுக்கான மாநாட்டை மதுரையில் நடத்தியிருக்கிறார் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள். ஆரியக் கோட்பாடான குலக்கல்வி திட்டத்தை ஊக்கப்படுத்தவே இந்த மாநாட்டை ஆர்எஸ்எஸ் பின்னணியில் நடத்தியுள்ளார்.
பார்ப்பனரல்லாத சமூகம் படிக்ககூடாது என்பது தான் சனாதனம். அந்த சனாதனத்தை நிலை நிறுத்த பார்ப்பனக்கும்பலின் பின்னணியோடு இப்படியான மாநாடுகளை நடத்துகிறார் சீமான். மாடுகளை பாதுகாக்கும் ஆர்எஸ்எஸ் கோசாலைகளும் சீமானின் மாநாடுகளும் ஒரே நோக்கத்தில் நடத்தப்படுகின்றன. பனை ஏறி கள்ளு குடிக்க வலியுறுத்துவதும், மாடுகளை மேய்க்கச்சொல்லுவதும், குடி பெருமையின் உச்சம். சாதி வெறியின் எச்சம். அது சரி, மாடுகளை மேய்க்கவும் பனை ஏறவும் பார்ப்பனர்களை வலியுறுத்துவாரா? அல்லது காலம் காலமாய் தொழில் செய்வோரே செய்யணுமா?” என்று குறிப்பிட்டுள்ளார்.
Read More : “தமிழ்நாடு தலைவணங்காது.. இது ஓரணி vs டெல்லி அணி..” முதலமைச்சர் ஸ்டாலின் ட்வீட்..