பொதுவாக, வீடு, மனை வாங்குவோர் தாக்கல் செய்யும் கிரைய பத்திரங்களில் ஏதாவது குறைகள் இருந்தால், சார் பதிவாளர்கள் பத்திரங்களை பதிவுக்கு ஏற்க மாட்டார்கள்.. இதுகுறித்து சொத்து வாங்கும் நபர், சம்பந்தப்பட்ட மாவட்ட பதிவாளரிடம் மேல்முறையீடு செய்யலாம். அங்கும் தீர்வு ஏற்படாத நிலையில், நீதிமன்றத்தை நாடலாம். அப்படி கோர்ட்டை நாடும் நிலையில், சம்பந்தப்பட்ட பத்திரங்களை பதிவு செய்ய, நீதிமன்றம் உத்தரவிடுகிறது.
அப்போது பத்திரங்களை பதிவு செய்வதில் சார் பதிவாளர்களிடம் குழப்பம் இருப்பதாக பொதுமக்களிடையே புகார்கள் எழுந்த நிலையில், தமிழக பதிவுத்துறை முக்கிய அறிவிப்பொன்றை வெளியிட்டது. பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் புதிய நடைமுறை தொடர்பான உத்தரவை வெளியிட்டுள்ளார். அதன் படி, நீதிமன்ற உத்தரவை அடிப்படையாகக் கொண்டு மீண்டும் பதிவு செய்யப்படும் பத்திரங்களை நிர்வாக மாவட்ட பதிவாளரின் அனுமதி பெற்று, அதன் பின்னர் டிஐஜி பரிந்துரை பெற்ற பிறகு, சார் பதிவாளர் எழுத்து மூலம் ஒப்புதல் கடிதம் வழங்க வேண்டும்.
பின்னர், திட்ட ஒருங்கிணைப்பாளரின் உதவியுடன் பத்திர விவரங்களை கணினியில் திருத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இதையடுத்து, ஏற்கனவே தற்காலிக எண் அளிக்கப்பட்டிருந்தால், அதையே மீண்டும் ஒதுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நடவடிக்கை, தற்காலிக எண் இல்லாமல் திரும்ப பெறப்பட்ட பத்திரங்கள் மற்றும் அங்கீகாரம் இல்லாத மனை தொடர்பான பத்திரங்களுக்கு பொருந்தாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பத்திரப்பதிவு, போலி பத்திரம், லஞ்சம் உள்ளிட்ட புகார்களை பொதுமக்கள் பதிவுத்துறைக்கு எளிமையாக தெரிவிக்க: 94984 52110, 94984 52120, 94984 52130 என்ற தொலைபேசி எண்கள் மூலமாகவோ, ctsec@tn.gov.in என்ற மின்னஞ்சல் மூலமாகவோ புகார்களை பதிவு செய்யலாம்.
போலி பத்திரங்களை ரத்து செய்ய மாவட்ட பதிவாளரிடம் புகார் அளிக்கலாம். சிவில் வழக்கு நிலுவையில் இருந்தாலும் கூட, மாவட்ட பதிவாளர் நடவடிக்கை எடுக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் முன்பே உத்தரவிட்டுள்ளது. பொதுமக்கள் உரிமையை பாதுகாக்கும் வகையில், இந்த புதிய நடைமுறையை மாவட்ட பதிவாளர்கள் கடைப்பிடிக்க வேண்டும் என பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது.
Read more: அளவுக்கு அதிகமாக தண்ணீர் குடிக்குறீங்களா..? உயிருக்கே ஆபத்து..!! – எச்சரிக்கும் நிபுணர்கள்