இந்தியா என்ற பெயரை பாரத் என மாற்ற அரசியலமைப்பு சட்டத்தில் சாத்தியக்கூறுகள் இருக்கிறதா? அப்படி இருந்தால் அதற்கான வழிமுறைகள் குறித்து இந்த தொகுப்பில் தெரிந்துகொள்ளலாம்.
செப்.9ஆம் தேதி நடைபெற இருந்த ஜி-20 மாநாட்டில் பங்கேற்கும் தலைவர்களுக்கும், பல்வேறு நாட்டு பிரதிநிதிகளுக்கு இரவு விருத்திற்கான அழைப்பிதழில் குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை ‘President Of India’ என குறிப்பிடாமல் ‘President Of Bharat’ என குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, நாட்டின் பெயரை இந்தியா என குறிப்பிடாமல் பாரத் என குறிப்பிடப்பட்டதற்கு எதிர்கட்சிகள், ஜனநாயக அமைப்புகள் உள்ளிட்டவை எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்தியா, 140 கோடி மக்களுக்கானதே தவிர, ஒரு கட்சிக்கு மட்டுமானது அல்ல' என எதிர்க்கட்சிகள் இதற்குக் கடுமையாக எதிர்வினையாற்றி வரும் வேளையில்,
பாரதம் என்று அழைப்பதில் என்ன தவறு?’ என பா.ஜ.க கூறுகிறது. இவ்வாறு அரசியல் விவாதங்கள் ஒருபுறம் இருந்தாலும், அரசியலமைப்புச் சட்டம் இதில் என்ன கூறுகிறது, இது போன்ற விவகாரத்தில் கடந்த காலத்தில் என்ன நடந்திருக்கிறது என்று பார்க்கலாம்.
அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு 1-இல், “இந்தியா, அதாவது பாரதம், மாநிலங்களின் ஒன்றியமாக இருக்கும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு 1 ‘இந்தியா’ மற்றும் ‘பாரத்’ இரண்டையும் நாட்டின் அதிகாரப்பூர்வ பெயர்களாக அங்கீகரிக்கிறது என்பது தெரியவந்துள்ளது.
2016-ல் அப்போதைய தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர், நீதிபதி யு.யு.லலித் ஆகியோர் அமர்வில், இந்தியாவின் பெயரை பாரதம் என்று மாற்றக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது மனுதாரரிடம், “பாரதமா அல்லது இந்தியாவா… நீங்கள் பாரதம் என்று அழைக்க விரும்பினால், பாரதம் என்றே அழையுங்கள். யாராவது இந்தியா என்று அழைக்க விரும்பினால், அவர்கள் அதை இந்தியா என்று அழைக்கட்டும். எனவே, இது போன்ற மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படாது” என்று கூறிய நீதிமன்ற அமர்வு, வழக்கை தள்ளுபடி செய்தது.
அதன் பிறகு 2020-லும் இதே போன்ற வழக்கு மீண்டும் வந்தபோது, அதை மறுத்த உச்ச நீதிமன்றம், இது போன்ற மனுவை பிரதிநிதித்துவமாக மாற்றி, உரிய முடிவுக்காக மத்திய அரசுக்கு அனுப்பலாம் என்று பரிந்துரைத்தது. மேலும், அப்போதைய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, `பாரதம், இந்தியா இரண்டு பெயர்களும் அரசியலமைப்பில் இருக்கின்றன. மேலும், அரசியலமைப்பில் இந்தியா ஏற்கெனவே பாரதம் என்று அழைக்கப்படுகிறது" என்று கூறினார். அதன் பிறகு தற்போது மீண்டும், இந்தியாவை
பாரதம்’ என மாற்றுவது என்பது விவாதப்பொருளாக மாறியிருக்கிறது.
வழிமுறை என்ன? இந்தியாவின் பெயரை `பாரதம்’ என்று மாற்ற அரசு முடிவு செய்தால், முதலில் அரசியலமைப்புப் பிரிவு 1-ஐ திருத்தியமைப்பதற்கான மசோதாவை தாக்கல் செய்ய வேண்டும். அதற்கு அரசியலமைப்புப் பிரிவு 368, பெரும்பான்மை மூலமாக அரசியலமைப்பில் திருத்தம் மேற்கொள்ள அனுமதிக்கிறது.
எனவே, பிரிவு 1 உட்பட, அரசியலமைப்பில் பிற திருத்தங்கள் கொண்டுவர, அதற்கான மசோதாவில் சிறப்பு பெரும்பான்மையாக, அவை உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கு அதாவது 66 சதவிகிதம் பேர் வாக்களிக்க வேண்டும். மேலும், இதே நடைமுறையின்படி, புதிதாக மாநிலத்தை உருவாக்குதல், ராஜ்ய சபாவில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான இடங்களை ஒதுக்கீடு செய்தல் போன்ற அரசியலமைப்பின் சில பிரிவுகளில்கூட பெரும்பான்மை (50 சதவிகிதத்துக்கு மேல்) மூலம் திருத்தம் கொண்டுவரலாம். செப்டம்பர் 18 முதல் 22 வரை நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் நடக்கவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.