பழம்பெரும் நடிகை சரோஜா தேவி இன்று காலமானார். அவருக்கு வயது 87.
பெங்களூரு மல்லேஸ்வரம் பகுதியில் உள்ள தனது இல்லத்தில் வயது முதிர்வால் சரோஜா தேவி காலமானார்.. திரையுலக சேர்ந்த பல்வேறு பிரபலங்கள், ரசிகர்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் சரோஜா தேவியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்..
தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் 200-க்கும் மேற்பட்டங்களில் நடித்தவர் சரோஜா தேவி.. இந்திய திரையுலக வரலாற்றில் மிகச்சிறந்த நடிகைகளில் ஒருவராக போற்றப்படுகிறார்.
1955-ம் ஆண்டு வெளியான மகாகவி காளிதாஸ் என்ற கன்னட படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார் சரோஜா தேவி.. 1958- ஆம் ஆண்டு வெளியான நாடோடி மன்னன் என்ற படத்தின் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதை தொடர்ந்து அவருக்கு சினிமாவில் வாய்ப்புகள் குவிய தொடங்கின.. இதனால் குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகையாக மாறினார் சரோஜா தேவி..
எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் உள்ளிட்ட திரையுலக ஜாம்பான்களுடன் பல்வேறு படங்களில் நடித்தவர். எம்.ஜி.ஆருடன் 26 படங்கள், சிவாஜி உடன் 22 படங்களில் அவர் நடித்துள்ளார்.
பார்த்திபன் கனவு, அன்பே வா, ஆசை முகம், ஆலய மணி, கல்யாண பரிசு, எங்கள் வீட்டுப்பிள்ளை, புதிய பறவை என பல வெற்றிப் படங்களில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.. எந்த கதாப்பாத்திரமாக இருந்தாலும் தனது நேர்த்தியான நடிப்பின் மூலம் கதாப்பாத்திரங்களுக்கு உயிர் கொடுக்கும் நடிகைகளில் சரோஜா தேவியும் ஒருவர். கன்னடத்து பைங்கிளி, அபிநய சரஸ்வதி என ரசிகர்களால் அழைக்கப்பட்டார்.
அந்த காலக்கட்டத்தில் பிசியான நடிகைகளில் இவரும் ஒருவர்.. ஒரு நாளில் 18 மணி நேரம் நடிப்பாராம்.. தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது, ஆந்திர அரசின் விருதுகள், மத்திய அரசின் பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன் விருதுகளையும் வென்றுள்ளார். 1967-ல் ஸ்ரீ ஹர்ஷா என்பவரை மணந்த சரோஜாதேவிக்கு கௌதம் ராமச்சந்திரன், இந்திரா என 2 வாரிசுகள் உள்ளனர்.
அவர் கடைசியாக 2009-ம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியான ஆதவன் படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது..