டெக்சாஸ் நகரை புரட்டிப்போட்ட தொடர் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப் பேரழிவில் இறந்தவர்களின் எண்ணிக்கை 131 ஆக உயர்ந்துள்ளதாக ஆளுநர் கிரெக் அபோட் தெரிவித்துள்ளார். மேலும், அமெரிக்க வரலாற்றிலேயே இதுவொரு மிக மோசமான வெள்ளப் பேரழிவாகவே பதிவாகியுள்ளது.
ஜூலை 4ம் தேதி தொடங்கிய இந்த கனமழை, திடீர் வெள்ளமாக உருவெடுத்து கெர்வில்லே மற்றும் சுற்றுவட்டாரங்களில் பேரழிவை ஏற்படுத்தியது. குவாடலூப் நதி, ஒரு மணி நேரத்தில் பெய்த கனமழையால் திடீரென பெருக்கெடுத்து கொடிய வெள்ளமாக மாறியது. திங்கட்கிழமை நிலவரப்படி, கெர்வில்லே பகுதியில் 97 பேர் காணாமல் போயுள்ளனர்.
இது, கடந்த வாரத்தில் இருந்த 160 பேர் எண்ணிக்கையிலிருந்து குறைந்தாலும், மீட்பு பணிகள் இன்னும் நடைபெற்று வருகின்றன. கெர் கவுண்டியில் உயிரிழந்தவர்களில் மூன்றில் ஒரு பங்கு குழந்தைகள் என ஆளுநர் அபோட் தெரிவித்தார். பலர், ஹன்ட் நகரில் உள்ள ‘கேம்ப் மிஸ்டிக்’ என்ற பெண்கள் மட்டும் கலந்துகொள்ளும் கிறிஸ்தவ முகாமின் அருகே ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தனர்.
நாட்டின் தேசிய வானிலை சேவையின் கணிப்பின் படி, ரியோ கிராண்டே முதல் ஆஸ்டின் வரை, மத்திய டெக்சாஸின் பரந்த பகுதியில், செவ்வாய்க்கிழமை வரை அரை அடி அளவுக்கு மழை பெய்யும் அபாயம் உள்ளது. இதனால் மீட்பு பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. மக்கள் உயரமான பகுதிகளுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மீட்பு பிழைகள், மற்றும் எதிர்கால தடுப்புச் செயலிகள் குறித்து ஆராய, டெக்சாஸ் சட்டமன்றம் ஜூலை மாத இறுதியில் சிறப்புக் கூட்டம் நடத்த உள்ளதாக ஆளுநர் அபோட் அறிவித்தார். அத்துடன், “கெர் கவுண்டியில் திடீர் வெள்ள எச்சரிக்கை சைரன்கள் இல்லாதது” மற்றும் “தேசிய வானிலை சேவை அலுவலகங்களில் பணியாளர் பற்றாக்குறை” ஆகியவை மக்கள் உயிரிழப்புக்கு பங்களித்துள்ளதாக ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.
Read more: விவசாயிகளுக்கு ஜாக்பாட்.. இலவச விதைகள் வழங்கும் தமிழக அரசின் திட்டம்..!! உடனே இத செய்ங்க..