2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட 28 எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து “இந்தியா” கூட்டணியை உருவாக்கி உள்ளன. இந்தக் கூட்டணியின் 3-வது கூட்டம் கடந்த சில தினங்களுக்கு முன் முபையில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில், வருகிற நாடாளுமன்ற தேர்தலில் முடிந்த அளவு இணைந்து செயல்பட வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி, காங்கிரசுடன் கூட்டணி கிடையாது எனவும், 13 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி தனித்து போட்டியிடும் இதுவே முதல்வர் பகவந்த் மானின் வழிகாட்டுதலாகும் என்று பஞ்சாப் சுற்றுலாத்துறை அமைச்சர் அன்மோல் ககன் மான் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களை சந்தித்த சுற்றுலாத்துறை அமைச்சர் அன்மோல் ககன் மான் கூறியதாவது, “நாங்கள் காங்கிரசுடன் கூட்டணி வைக்க மாட்டோம். பஞ்சாப் மக்கள் முதல்வர் பகவந்த் மானை விரும்புகிறார்கள். காங்கிரஸுடன் எந்த வகையான கூட்டணியையும் பொறுத்துக்கொள்ள முடியாது. காங்கிரஸில் இல்ல பல தலைவர்கள் மீது வழக்குகள் உள்ளது. பஞ்சாபில், எங்களுக்கு மாநில பொறுப்பு உள்ளது. பஞ்சாபில், காங்கிரசுடன் எந்த வித சமரசமும் இருக்காது. நாங்கள் சுதந்திரமாக தேர்தலில் போட்டியிடுவோம்.
கடந்த ஆண்டு பஞ்சாபில் உள்ள 117 சட்டமன்ற இடங்களில் ஆம் ஆத்மி கட்சி 92 இடங்களை வென்றது, அடுத்த தேர்தலில் மக்கள் கட்சிக்கு மீண்டும் ஆசி வழங்குவார்கள். நாங்கள் பஞ்சாப் மக்களுடன் இருக்கிறோம். அனைத்து (லோக்சபா) தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவோம். நாங்கள் நேர்மையான கட்சி. முதல்வர் பகவந்த் மன்னின் பணியை மக்கள் விரும்புகிறார்கள். நாங்கள் யாருடனும் கூட்டணி வைக்க வேண்டிய அவசியம் இல்லை” என்று கூறினார்.
ஆம் ஆத்மியின் பஞ்சாப் பிரிவு தனது கருத்தை கட்சித் தலைமைக்கு தெரிவித்திருக்கிறதா என்ற கேள்விக்கு, சுற்றுலாத்துறை அமைச்சர் அன்மோல் ககன் மான் ‘காங்கிரஸ் உட்பட பல கட்சிகள் இந்தியா கூட்டணியில் உள்ளன. ஆனால் பஞ்சாபில் அரசியல் வேறு. இங்கே ஆம் ஆத்மி 13 இடங்களை வெல்ல முடியும் என்றார்.
ஆம் ஆத்மியின் பஞ்சாப் பிரிவின் இந்த முடிவுக்கு ஆத்மி கட்சியின் தலைவரும், புது டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் எப்படி சமாளிக்கப்போகிறார். இதனால் இந்தியா கூட்டணிக்கு சிக்கல் அதிகரித்துள்ளது.